நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... அட்டகாசம் - 3



V11 குழும நண்பர்கள் அடுத்த நெடுந்தூரப் பயணம் போக இடம் முடிவு செய்தபோது நாம் பரிந்துரைத்தது இரண்டு இடங்கள். ஒன்று கூர்க்.. மற்றது ஆகும்பே. ஆகும்பே கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள ஒரு மழைக்காடுகள் நிறைந்த மலைப் பகுதி. Land of King Cobras எனவும் Cherapunji of south என்றும் அழைக்கப்படுகிற இடம். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 360 கிலோ மீட்டர்கள். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையே கொஞ்சம் சுத்தலான வழிதான். ரத்தினா அண்ணன், பிரபாகரன், துபாய் சுரேஷ் அண்ணன், அருண்,போபண்ணா சார் ஆகியோர் மட்டும் முதல் நாளே கிளம்பி பெங்களூரு சென்று தங்களுடைய சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு எங்களுக்காக தொப்பல்லபுராவில் காத்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை 3.30க்கு விருகம்பாக்கம் V11 ஷோரூமிலிருந்து புறப்படுவதாக இருந்தது.முதல் நாள் இரவிலிருந்து எல்லாவற்றையும் தயார் செய்வதிலேயே நேரம் கடந்து விட்ட படியால் சுத்தமாக தூக்கமில்லை 2.30க்கெல்லாம் வண்டியில் saddle bagஐ கட்டிவிட்டு எப்படா விடியுமெனக் காத்திருந்தேன்.இந்த ரைடுக்கு ஹரி தான் லீட் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் முன்னதாகவே எந்தெந்த ஊர்கள் வழியாக போகப் போகிறோம் ; எந்த வழியாக திரும்ப வரப்போகிறோம்; என பட்டியல் போட்டு ரூட் மேப்போடு அனுப்பிவைத்திருந்தார். கிட்டத்தட்ட 750 சொச்சம் கிலோமீட்டர்களை கடக்க வேண்டி இருந்ததால் நிறைய திட்டமிடல் அவசியமாக இருந்தது.


ஒருவழியாக எல்லோரும் வந்து சேர்ந்து கிளம்பும்போது மணி 4.30ஐத் தொட்டிருந்தது.குடியாத்தம், சித்தூர் தாண்டி வந்து காலை உணவுக்காக விஜயபுரா வந்து சேர்ந்தோம். காலை உணவை முடித்துவிட்டு கோலார் வழியாக தொட்டபெல்லபுரா தாண்டி தெபஸ்பேட் வந்து சேரும்போது மணி மதியம் 12.00.முந்திய நாள் கிளம்பி வந்த ஐவர் அணி தங்கியிருந்த ஹோட்டல் முன்பு எல்லோருடைய வண்டிகளையும் பார்க் செய்து விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். அப்போது தான் ஒரு பெரிய ஆப்பு வந்து எங்கள் பயணவேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. அருணுடைய desert storm 500ன் இஞ்சின் சிலிண்டரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கான உதிரி பாகங்கள் வந்து வண்டி சரியாகிற நேரத்தில் எல்லோரும் மதிய உணவை அங்கேயே முடித்து விடலாமென திட்டமிட்டோம்.சாப்பிட்டு முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகும்போதும் அருணுடைய வண்டி பிரச்சனை சரியாகாததால் அருணும் சுரேஷ் அண்ணனும் மட்டும் அடுத்த நாள் அதிகாலை கிளம்பிவருவதாக சொன்னார்கள்.மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பினோம்.





மாலை வெயில் மின்ன ஹிரியூர், சிரா வழியாக நெடுஞ்சாலைகள் அல்லாத அழகான பாதைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினோம்.அங்கங்கே நிறுத்தி தேனீர் மட்டும் அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். இருட்டுகிற வேலையில் ஹோசதுர்கா தாண்டி பத்ராவதி வந்து சேர்ந்தோம். செக்போஸ்ட்டில் எண்ட்ரி போட்டுவிட்டு ஒரு நீண்ட நெடும் மலைப் பாதை வழியான பயணத்தை எதிர்நோக்கியபடி இஞ்சின்கள் உறும ஆரம்பித்தன

மெலிதாக மழை தூற ஆரம்பித்தவுடனேயே அத்தனை பேரும் ரெயின் கோட்டும் saddle bagக்கான ரெயின் கவரையும் அணிவித்து/அணிந்துகொண்டு கிளம்பினோம். இதற்கு மேல் நிறைய மலைப்பாதைகளை வேறு எதிர்நோக்கியிருந்தோம்.மழை, இருட்டு, மலைப்பாதை அத்தனையும் சேர்ந்து உள்ளுக்குள் மெலிதாக திகிலைக் கிளப்பியிருந்தது எனக்கு. முந்தைய நாள் தூங்காமல் போனதன் விளைவை உடல் காட்ட ஆரம்பித்தது. கண்ணிமைகள் கனக்கத் தொடங்கின.தங்குமிடம் போய்ச் சேர்ந்தால் போதுமென வெறுப்போடு வண்டியோட்ட ஆரம்பித்தேன். பிற ரைடர்களை முன்னே போகவிட்டு நான் வேகம் குறைக்க ஆரம்பித்தேன்.கடைசியாக நான், ரத்தினா அண்ணன், பிரபா, தீன், ஆனந்த் நாயர் ஆகியோர் மட்டும் தான் பின்னே சென்று கொண்டிருந்தோம் . அவ்வப்போது முன் செல்லும் லாரிக்காரர்களிடும் ஹெட்லைட்டில் கெஞ்சி வழி கேட்டு முன்னேற வேண்டியிருந்தது ஒரு கட்டத்தில் எனக்கு முன்னே பின்னே யார் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது . கழுத்துக் கயிற்றில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் கன்றுக் குட்டிபோல என் வண்டி எனது கட்டுப்பாட்டிலிருந்து மிக மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு வளைவில் தார்ச்சாலையை விட்டுக் கீழே இடதுபக்க மண்பாதையில் இறங்கியது. நான் அரைமயக்கத்துல் காலூன்றி செய்வதறியாது அப்படியே நின்றேன். பின்னே வந்து கொண்டிருந்த ரத்னாவும் பிரபாவும் பதறியடித்து வண்டியை நிறுத்திவிட்டு என்னை பிடித்தார்கள். வண்டியை சாலையில் ஏற்றிவிட்டு .ஒரு கேன் முழு Redbullஐ அருந்தவைத்தார்கள்.

”தம்பி..வண்டிய திருவாத.. என் டெயில் லேம்ப்ப மட்டும் அப்படியே ஃபாலோ பண்ணி வா. பொறுமையாவே போவோம். பசங்க எங்க இருக்காங்களோ அங்க வண்டிய வேற ஆள்ட்ட மாத்திவிட்டுட்டு நீ வேற வண்டியில பில்லியனா வரலாம்.. “ ரத்னா அண்ணன் சொன்னது எங்கோ தொலைவில் கேட்டது எனக்கு. பொறுமையாய் உருட்ட ஆரம்பித்தேன் கிட்டத்தட்ட 18 மணி நேரத்துக்குமேல் வண்டியோட்டிருந்தோம் எல்லோருமே. ஒரு இடத்தில் முன்னே சென்ற நண்பர்கள் எங்களுக்காக காத்திருந்தார்கள்.மணிப்பூர் பையன் சஞ்ஜீப்பிடம் என் பைக்கைக் கொடுத்துவிட்டு நான் சதீஷ் அண்ணன் வண்டியில் பில்லியன் ஏகினேன். என்னைத்தவிர பிரபாவும் சதீஸ் அண்ணனும் மட்டுமே எலெக்ட்ரா வாசிகள். மற்ற எல்லோருமே தண்டர்பேர்ட்/க்ளாசிக் தான். நான் அவர் தோளைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தேன். இன்னும் 20 சொச்சம் கிலோமீட்டர்கள் போக வேண்டுமென பேசிக் கொண்டார்கள்.


எக்சாக்ட்லி இந்தக் காட்சி தான். இந்த இடத்திலிருந்து பாருங்கள்

என் ஹெல்மெட் வைசர் மூடியபடியே இருந்தது. கண்டென்சேஷனால் வைசரின் உட்பக்கம் ஆவி படர்ந்தது. வெளியே மழை.எனக்கு அரைத்தூக்கம். சதீஷ் அண்ணன் வண்டியைக் கிளப்பியதும் சாலையின் மின்விளக்குகளின் ஒளி மட்டும் மங்கலாக பின்செல்ல ஆரம்பித்தது.இஞ்சின் சத்தம் தவிர்த்து வேறெதுவும் காதில் விழவில்லை.ஒவ்வொரு வளைவிலும் வண்டி சாய்ந்து திரும்புவதை உணர முடிந்தது. இண்டர்ஸ்டெல்லார் படத்தில் கூப்பர் தன் விண்கலதோடு கருந்துளைக்குள் புகுந்து தன்னை விடுவித்துக் கொள்வாரில்லையா.. கிட்டத்தட்ட அதே காட்சியை என்னால் உணர முடிந்தது.வண்ணங்கள்.. வெளிச்சம்.. இருட்டு.. மழை.. இஞ்சின் சப்தம்.. சாலையின் வளைவுகள்..அரை மயக்கம்.. வேறெதுவுமில்லை. அந்த 18 கிலோமீட்டர்கள் ஏதோ கருந்துளைக்குள் நுழைந்த யுகப்பயணம் போலத் தோன்றியது.ஒருவழியாக ரிஸார்ட் வந்து சேர்ந்தோம்.



அதிகாலைக்கு கொஞ்சம் முந்திய மூன்று மணி இருள்.வண்டியை பார்க் செய்துவிட்டு ரைடிங் கியர்களைக் களைந்து ட்ராக்ஸ் ஷார்ட்ஸுக்கு மாறி அவரவர்க்கு பிடித்து உணவுப் பதார்த்தங்களோடு காரிடரில் அமர்ந்தோம். கடகடவென உண்டு முடித்து அறைகளில் கட்டிலில் விழும்போது மணி 4.30க்கு கொஞ்சம் அதிகம்.முதுகும் தோள்களும் ”என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா” எனக் கதறின.. ஒருவழியாய் உறங்கினேன்.


திரும்பிவந்ததே தனி கதை - அதனால 3.1ல தொடரும்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

Whiplash - 2014 - நான் ஆணையிட்டால்

  



Question: But some reviewers describe him (Fletcher) as a monster, and some as a cruel but necessary teacher, citing what Andrew accomplishes under his watch. Did you intend for Fletcher to be ambiguous?

Chazelle (Director of Whiplash): Yeah, because I think that’s the question posed by a lot of these tyrannical teachers, tyrannical band leaders, tyrannical directors. To what extent is it the tyranny pushing people, and to what extent is it other stuff? I personally think fear is a motivator, and we shouldn’t deny that. Someone like Fletcher preys on fear. I think there’s a reason his methodology sometimes works, both in real life and on the screen. Fletcher’s methodology is like if there was an ant on this table, and I wanted to kill it, so I used a bulldozer. Yeah, you kill the ant, but you also do a lot of other damage. And in Fletcher’s mindset, that’s actually fine. Fletcher’s mindset is, “If I have 100 students, and 99 of them are, because of my teaching, ultimately discouraged and crushed from ever pushing this art form, but one of them becomes Charlie Parker, it was all worth it.” That’s not a mentality I share, but in many ways, that’s the story of the movie. He potentially finds his Charlie Parker, but he causes a lot of wreckage in that pursuit.

1937 ஆம் வருடம். அமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் 'ரெனோ’ க்ளப்பில் அன்றைய இசை நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் 16 வயது சாக்ஸபோன் கலைஞர் சார்லி பார்க்கர். மேடையில் அவரோடு ட்ரம்ஸ் வாசிக்கப்போவது ‘ஜோ ஜோன்ஸ்’ என்கிற மகா ஜித்தர். அவருடைய முறை வந்ததும் வாசிக்கத் தொடங்கிய சார்லி பார்க்கர் ஏதோ கொஞ்சம் சொதப்ப, கடுப்பான டிரம்மர் ஜோ அவருடைய ட்ரம் கிட்டின் சிம்பலை (பெரிய உலோகத்தட்டு போல.. பார்த்திருப்பீர்கள் தானே) சார்லியை நோக்கி விட்டெறிகிறார். பறந்து வந்து சார்லியின் காலில் விழ, அரங்கம் மொத்தமும் அதிர்ந்து சிரித்து ஆரவாரக் கூச்சலிட அவமானப்பட்டு மேடையை விட்டு இறங்குகிறான் இளாம் சார்லி.எங்கோ ஊருக்கு வெளிய ஒரு விடுதியில் தன்னை அடைத்துக் கொண்டு ஒரு வருடம் ராட்சசத்தனமான பயிற்சியில் ஈடுபடுகிறான்.அடுத்த வருடமே ஊர் உலகம் அதிசயிக்கிற மாதிரியான ஒரு solo பெர்ஃபாமன்ஸ் அளிக்கிறான்.அதுமட்டுமல்லாது, தன்னுடைய போதைப் பழக்கத்தால் 34 வயதில் மரணமடைந்த ’சார்லி பார்க்கர்’ aka ’The Bird', தேய்வழக்கில் சொல்வதானால் இன்றுவரை ஜாஸ் இசை உலகின் முடிசூடாமன்னராக விளங்குகிறார். ஒருவேளை 16 வயதில் , மேடை மேல் அந்த அவமானத்தை எதிர் கொள்ளாமல் போயிருந்தால்...அவர் அத்தனை பெரிய மேதையாக உருவாகியிருப்பாரா...??

பிறக்கும்போதே அதீத திறமையுடன் பிறக்கின்ற Prodigyகள் தவிர்த்து பல்வேறு துறைகளில் லெஜண்டுகள் பலரும் எண்ணிலா அவமானங்களையும் தூற்றல்களையும் தடைகளையும் தாண்டி தான் மேலே வந்திருக்கின்றார்கள். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பிரபலமான உதாரணம் சொல்வதானால் ‘பராசக்தியில்’ நடிக்க வந்த சிவாஜிகனேசனுக்குக் கிடைத்த ‘குதிரை மூஞ்சி’ப் பட்டம். இசைக்கலைஞரோ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, கட்டிடப் பொறியாளரோ, அரசியல்வாதியோ.. யாராக இருந்தாலும் தத்தமது துறைகளில் அவர்கள் அடைகிற உயரங்களுக்கு அவமானங்கள் தான் உரமா..அல்லது வேறெப்படியாகிலும் அவர்கள் அந்த நிலையை அடைந்துவிடுவார்களா...??

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களுக்கு இந்த ‘tapping the potential..', 'pushing beyond limits' ஆகிய சொற்றொடர்கள் பரிச்சயமானவையாக இருக்கலாம். அதாவது அதீத திறமை இருப்பதாக அடையாளம் காணப்படும் ஒருவனை, அவன் உடைந்துபோகிற அளவு உச்சகட்ட சுமையை ஏற்றி எதிர்ப்பார்புகளையும் வளார்த்துக் கொள்(ல்)வது. அந்த உச்சகட்ட சுமையில் மன அழுத்தம் தாங்காமல் உடைந்து போகிறவர்களே பெரும்பாலானவர்கள். Mediocres...!! மாறாக அத்தனை அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிக் கோட்டை எட்டுகிற லெஜண்டுகள்/ஜீனியஸ்கள் வெகு சொற்பமே. Whiplash திரப்படத்தின் அடிநாதமே இதுதான்...!

ஆண்ட்ரூ நெய்மன் (Miles Teller), 19 வயது ட்ரம்மர். உலகின் மிகச்சிறந்த ட்ரம்மர்களில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற கனவோடு ஷேஃபர் இசைப்பள்ளியில் சேர்கிறான். ஒரு இரவு ஆண்ட்ரூ தன் அறையில் ட்ரம்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அந்த வழியே நடந்து செல்கிற பயிற்சியாளர் ஃப்ளெட்சர் (J.K.Simmons), ஆண்ட்ரூவை தன்னை அடுத்த நாள் வந்து சந்திக்கும்படி சொல்கிறார். சில பல இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து ஆண்ட்ரூவைச் சோதித்த பின்னர் அடுத்த நாள் முதல் தன்னுடைய் இசைக்குழுவில் வந்து சேர்ந்து கொள்ளச் சொல்கிறார். தனது திறமை அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக முதலில் மகிழும் ஆண்ட்ரூ அடுத்தடுத்த நாட்களில் தன் வாழ்நாளின் மோசமான பகுதிகளைக் கடக்க நேரிடுகிறது. காரணம், ஆசிரியர் ஃப்ளெட்சர், அவருடைய முரட்டுத்தனமான அணுகுமுறையும் மாணவர்களை மிக மிக மோசமாகத் திட்டியும் நடத்தியும்,  மன அழுத்தத்தை உண்டாக்கியும் அவர்களை perfectionistகளாக மாற்ற முயலும் தன்மையும் ஆண்ட்ரூவைக் கலங்கடிக்கின்றன.அவருடைய ஏச்சுகளைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தும் ஆண்ட்ரூ, கை கிழிந்து ரத்தம் வருமளவு பயிற்சியில் ஈடுபடுகின்றான். பெரும் மன அழுத்தத்துக்குளாகிறான். ஆனாலும் ஃப்ளெட்சருடைய எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமளவு ஒரு போட்டியில் அட்டகாசமாக வாசிக்கவும் செய்கிறான். ஒவ்வொருமுறை ஆண்ட்ரூ தன் திறமையை நிறுவ முயலும்போதெல்லாம் ஃப்ளெட்சர் தன் எதிர்பார்ப்புகளின் உச்சவரம்பை அதிகரித்தபடியே செல்கிறார்.

பின்பு மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு மேடையில் வாசிக்கவேண்டிய நேரத்தில் காலதாமதமாக வந்து கார் விபத்தில் சிக்கி ரத்தம் ஒழுக மேடையேறும் ஆண்ட்ரூ சொதப்ப, ஃப்ளெட்சர் கோபத்தில் மேடையிலேயே அவனைத் திட்ட; ஆண்ட்ரூ வெறி பிடித்தாற்போல் அவர் மீது பாய்கிறான். விளைவாக, இசைப்பள்ளியிலிருந்து நீக்கப்படும் ஆண்ட்ரூ தன் தந்தையின் உதவியோடு ஃப்ளெட்சர் மீது வழக்குத் தொடுக்க, அவருக்கும் வேலை பறிபோகிறது.தனது ‘உலகின் மிகச் சிறந்த ட்ரம்மர்’ ஆகும் கனவைக் குப்பைத்தொட்டியில் போடுகிறான். சில நாட்களுக்குப் பின் எங்கோ ஒரு ஜாஸ் நிகழ்ச்சியில் ஃப்ளெட்சர் மேடையில் வாசிப்பதைப் பார்க்கிறான் ஆண்ட்ரூ. அவரும் நிகழ்ச்சி முடிந்த பின் இறங்கிவந்து தனக்கு வேலை போய்விட்டதையும் அதனால் இது போல் வெளி நிகழ்ச்சிகளில் வாசித்துவருவதாகவும் சொல்கிறார், தன்னுடைய வேலை இசைமேதைகளை உருவாவுக்குதான் என்றும், அதற்காக தான் கையாளுகின்ற பயிற்சிமுறையே சிறந்ததென்றும் கூறுகிறார். முதல் பத்தியில் இருக்கிற சார்லி பார்க்கர் உதாரணாத்தைச் சொல்லி ‘A genius can not be made without humiliations' என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். மேலும் தனக்கு சரியான ட்ரம்மர் யாரும் அமையவில்லை எனவும் இசைப்பள்ளியில் பழக்கப்பட்ட ட்யூன்கள் தான் என்பதால் ஆண்ட்ரூ தனது இசைக்குழுவுக்காக ட்ரம்ஸ் வாசிக்க முடியுமாவென கேட்கிறார்.

 ஆண்ட்ரூ ஃப்ளெட்சருடைய இசைக்குழுவுக்காக வாசித்தானா....? அவனது ஆசைப்படி உலகின் மிகச் சிறந்த ட்ரம்மர் ஆனானா ??. இசைமேதையை உருவாக்கும் ஃப்ளெட்சரின் கனவு பலித்ததா...?? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் - டேமியன் சஸ்ஸேல்
இந்த திரைப்படத்தின் இயக்குநர் டேமியனின் சுவாரஸ்யமான ஒரு நேர்காணல் - இங்கே

படத்தில் ஆண்ட்ரூ முதல் நாள் ஃப்ளெட்சரின் இசைக்குழுவுக்காக வாசிக்கிற காட்சி. டைமிங்கை தவறவிட்டதற்காக ஃப்ளெட்சர் சொல்கிற ‘Not quite my tempo' என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெறுகிற காட்சியும் இதுவே.எப்படி வறுத்தெடுக்கிறாரென பாருங்கள்..!!


உங்கள் கருத்துகளையும் மறக்காமல் தெரிவியுங்கள்...!

செவ்வாய், 7 ஜூலை, 2015

முகம் தெரியாதோரின் இறுதிச்சடங்குகள்

http://hdwpics.com/
முகம் தெரியாதவரின் மரணங்களை நான் எப்போதும்
ஏற்றுக்கொண்டவனில்லை

ஆணோ பெண்ணோ வயோதிகரோ குழந்தையோ வளரிளம்பருவமோ
யாராய் இருந்தாலும்

அவர்தம் மரணச் செய்தி என் காதுகளை எட்டாதிருக்க விரும்புகிறேன்

முகம் தெரியாதவரின் மரணம் என்னைப் பித்துப் பிடிக்கவைப்பதனால் அல்ல

முகம் தெரியாதவரின் மரணம் என்னை அழவைப்பதனால் அல்ல

ஆனாலும்

அறியாத ஊரில், பழகாத தெருவில், முகவரி இல்லாத வீட்டில்,

அடையாளமில்லா பலருடன்

அழுதபடி நடந்துசெல்ல எனக்கு வலிமையில்லை

உறவில்லாத பிரிவுக்கு விளக்கம் சொல்லி

கண்ணீருக்குக் காரணம் சொல்ல எனக்கு விருப்பமில்லை

முகம் தெரியாதவரின் இறுதிச்சடங்குகளை வெறுக்கிறேன்

தயவுசெய்து மரண அறிவிப்புகளை எனக்குச் சொல்லாதிருங்கள்.

செவ்வாய், 30 ஜூன், 2015

புல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2




இந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ கேள்விப்பட்டிருப்பீங்க.நிஜத்துல அந்த காந்தளூர் எங்க இருக்குன்னா  மூனாருக்கு 23 கிலோமீட்டருக்கு முன்னாடி மறையூர் அப்டிங்குற ஊர்லேர்ந்து 16 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.V11 RERC ஜனவரி மாசம் போயிட்டு வந்த கொடைக்கானல் ட்ரிப்புக்கு அப்புறம் லாங் ரைட்ஸ் எதுவும் போகவேயில்ல. அரை நாள் ட்ரிப்பா ECRல இருக்க சத்ராஸ் ஃபோர்ட்டுக்கு மட்டும் போய்ட்டு வந்தோம்.திரும்ப வரும்போது மாமல்லா ரிஸார்ட்ல காலை உணவு.அப்போதான் அடுத்த ட்ரிப் காந்தளூர் போகலாம்னு கிருஷ்ணன் சார் சொன்னாரு.



உடுமலைப்பேட்டைலேர்ந்து மூனாறு போற வழில மறையூர்லேர்ந்து இடது பக்கம் திரும்பி 15 கிலோமீட்டர் போனா காந்தளூர். ரொம்ப அழகான அமைதியான ஊர்.இடுக்கி மாவட்டத்துக்கு கீழ வருது. வழக்கம் போல போக வேண்டிய ரூட்டெல்லாம் முன்னாடியே பேசி முடிவு பண்ணாங்க.
ஏப்ரல் மாசம் 11ஆந் தேதி சனிக்கெழம காலைல 4.30க்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ் ஷோரும்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அப்டி இப்டின்னு மொத்தம் 17 புல்லட் வந்து சேந்துச்சு அதுல ஒரு வண்டி எங்க புது மாடல் வண்டிக்கெல்லாம் பாட்டன். 1972 மாடல்; Cast Iron இஞ்சின்.வலதுகால் பக்கம் கியர் பாக்ஸ்.இடது கால் பக்கம் ப்ரேக்குன்னு... டிபிக்கல் ரெட்ரோ. புதுசா பெயிண்டிங்கெல்லாம் பண்ணி சும்மா மின்னிக்கிட்டு வந்துச்சு.காலைல 5.00 மணிக்கு சொல்லி வெச்சபடி கெளம்புனோம். கிருஷ்ணகிரி கிட்ட பள்ளிகொண்டாவுல ப்ரேக்ஃபஸ்ட் சாப்புட்றதா ப்ளான். வழக்கம் போல வெயில் வரதுக்கு முன்னாடி எவ்ளோ தூரம் போக முடியுமோ போயிடனும்கிறதுதான் திட்டம். சொல்லிருந்த மாதிரியே கரெக்ட்டா 7.30க்கெல்லாம் பள்ளிகொண்டா வந்தாச்சு. அங்க ஒரு ரோட்சைட் ஹோட்டல்ல ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு கெளம்புனோம். இதுக்கு நடுல 72 மாடல் வண்டி ஏதோ பிரச்சனையால சென்னைக்கு திரும்பிப் போச்சு.




மத்தியான சாப்பாட்டுக்கு கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்துல இருக்குற ஒரு கடைல சாப்புட்றதா முடிவு பண்ணோம்.தர்மபுரி. சேலம் வழியா கோபிச்செட்டிப்பாளையம் வந்து அங்கிருந்து ஒரு 40கிலோ மீட்டர் ஸ்டேட் ஹைவேஸ்ல  உள்ள போகவேண்டியதா இருந்துச்சு.ஆனா அந்த சாப்பாட்டுக்கு இந்த ட்ராவல் வொர்த்து.’மைவிழி’ உணவகம்னு கடை பேரு. 300 ரூபாய்க்கு அன்லிமிட்டட் அசைவ பஃபே சாப்பாடுஅதுவும் வீட்டு சாப்பாடு மாதிரி. எல்லாரும் சும்மா புகுந்து விளையாடுனோம். சைவ சாப்பாடும் உண்டு.. ஆனா அது கொஞ்சம் விலை குறைவு.சாப்ட்டு முடிச்சு எல்லாரும் வெளில கீற்று கொட்டகைல ஆளுக்கொரு பக்கம் சாஞ்சிட்டோம்.அடுத்து தாராபுரம்..உடுமலைப் பேட்டை வழியா போய் மலை மேல ஏறுறதுதான் திட்டம். அப்பவே மணி நாலு ஆயிடுச்சு. அப்போ தான் வெங்கட் வண்டியில பெட்ரோல் டேங்க் ஓட்டையாகி லீக் ஆனது தெரிஞ்சுது. அப்புறம் டேங்க்கை கழட்டி, காலி பண்ணி, கழுவி, வெல்ட் பண்ணி திரும்ப வரும்போது மணி 5.30க்கு மேல ஆகிடுச்சு. ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சு மலை ரோடு மேல ஏறுறதா முடிவு பண்ணி கெளம்புனோம்.



உடுமலைப்பேட்டைல வழக்கம் போல சில பேர் வேற ரூட்ல கொஞ்ச தூரம் போயிட்டதனால அவங்க வரதுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு.கடைசியா கேரளா செக்போஸ்ட்ல வண்டி நம்பர் குடுத்துட்டு பேரெழுதிட்டு கெளம்பும்போது மணி 8.30க்கு மேல ஆச்சு. ஃபார்ஸ்ட் ஆஃபிஸர்ஸ் முன்னாடியே சொல்லிதான் அனுப்புனாங்க.வழில வண்டிய எங்கேயும் நிறுத்தக்கூடாது , அனிமல்ஸ் வெளில வரும்னு. நாங்களும் எல்லாரும் மொத்தமா போனா சத்தம் ரொம்ப அதிகமா இருக்கும்னு கொஞ்சம் இடைவெளிவிட்டு போக ஆரம்பிச்சோம்.மலை ஏற ஏற செம்ம இருட்டு.நம்ம வண்டி ஹெட்லைட் தவிர  வேற எந்த வெளிச்சமும் இல்ல.கொஞ்சம் பதட்டத்தோட தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்.என் வண்டிக்கு 50 அடி முன்னாடியும் பின்னாடியும் வேற வண்டி எதுவும் இல்ல.
ரோட்டோட ரெண்டு பக்கமும் அவ்வளவு அடர்த்தியா மரங்கள்.  என் வண்டியுடைய இஞ்சின் சத்தமும் காட்டுக்குள்ளிருந்த வந்த விநோத சப்தங்களையும் தாண்டி வேறெதுவும் கேக்கல.

கொஞ்ச தூரம் தள்ளி ரோட்டோட இடது பக்கம் ஒரு பெரிய மரக்கிளை ஆடிட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட 600 மீட்டர் இடைவெளில. இது என்னடா எல்லா மரமும் அசையாம இது மட்டும் அசையுதேன்னு வண்டிய கொஞ்சம் லெஃப்ட்ல ஓரங்கட்டி ஹை பீம் போட்டா...!! யானை....!!! சாதுவா கிளைய இழுத்து என்னவோ சாப்டுட்டு இருந்துச்சு. எனக்கு செம்ம பதட்டம். சுத்தியும் வேற யாரும் வரல. என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு தார் ரோட்லேர்ந்து இறங்கி வலது பக்கம் கொஞ்சம் கரடு முரடான் மண் தரைல வண்டிய ஓட்டிட்டு போய்ட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு திட்டம்போட்டு வண்டிய ரைட்ல ஓரம் கட்னேன். பொறுமையா முன்னாடி போக ஆரம்பிச்சேன். ஒரு 200 மீட்டர் போனப்புறம் மறுபடியும் வலது பக்கம் ஏதோ அசைவு.என்னடா இது சோதனைன்னு மறுபடியும் ஹைபீம் போட்டா... ஒரு குட்டியானை...!! ரைட்டுடா... ரெண்டு பக்கமும் ஃபேமிலியோட நின்னுட்டு இருக்கே..என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு வண்டிய ஆஃப் பண்ணிட்டேன். அப்புறம் நடுவுல ஒரு சின்ன கேப் இருந்துச்சு அதுலயே போயிடலாம்னு முடிவு பண்ணி ஹெட்லைட்ட ஆஃப் பண்ணிட்டு டைகர் லேம்ப்னு ஒரு சின்ன லைட் இருக்கும் ஹெட்லைட் பக்கத்துல..அத மட்டும் ஆன் பண்ணிட்டு பொறுமையா வண்டிய உருட்டிகிட்டே பக்கத்துல போனேன். ரெண்டு பக்கமும் யானை பக்கத்துல வந்த ஒரு நொடி இருக்கே..யப்பா... யானைய தாண்டிட்டேன்னு தெரிஞ்சதும் லை ஆன் பண்ணி ஒரே திருவு தான் ரெண்டரை கிலோ மீட்டர் தள்ளிப் போய் தான் ஸ்லோ பண்ணேன். செம்ம அனுபவம். மறையூருக்கு முன்னால ஒரு டீக்கடைல எல்லாரும் அசெம்பிள் ஆனோம். இந்த இடைப்பட்ட கேப்ல திரும்பிப்போன அந்த 72 மாடல் வண்டிய சரி பண்ணி திரும்பவும் எங்க கூட அந்த டீக்கடை கிட்ட வந்து சேந்துகிட்டாங்க.


மறையூர் தான் செண்டர் பாயிண்ட். அங்கிருந்து நேராப் போனா மூணாறு.இடது பக்கம் திரும்பி 18 கிலோமீட்டர் போனா காந்தளூர். நாங்க எங்கெங்கேயோ தப்பான வழில கொஞ்ச நேரம் சுத்திட்டு ஒருவழியா நாங்க தங்க வேண்டிய ரிஸார்ட்டுக்கு வந்து சேந்தோம்.கொஞ்ச நேரத்துலேயே எல்லாரும் ரெஃப்ரஷ் ஆய்ட்டு கேம்ப் ஃபயர் சுத்தி உக்காந்து சப்பாத்தி சிக்கன் கறி...அது இதுன்னு வெளுத்துக் கட்டிட்டுப் போய்ப் படுத்தாச்சு. அடுத்த நாள் காலைல நாங்க தங்கியிருந்த ரிஸார்ட்டுக்கு எதிர் பக்கம் கொஞ்ச தூரத்துல ஒரு அருவி இருக்குறதா சொன்னாங்க. அதனால மொத்தமா கெளம்புனோம். ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்து போனதுக்கு அப்புறம் அட்டகாசமான ஒரு அருவி வந்துச்சு.ஒரு மணி நேரத்துக்கு மேல செம்ம குளியல் செம்ம ஆட்டம். திரும்பி மேல ஏறி வரும்போது பெண்டு கழண்டுபோச்சு. வந்து கேரளா ஸ்டைல் காலை டிஃபன் புட்டு, தேங்காய்ப் பால், ஆப்பம், கடலை கறி, சிக்கன் கொழம்புன்னு செம்ம மெனு. வெளுத்துக் கட்டிட்டு அப்புறம் மறுபடியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரம் டீ அடிச்சுட்டு ஸ்ட்ராபெரி தோட்டம் , கும்க்கி படத்துல வர ஒரு ஸ்பாட்னு ரெண்டு மூனு எடம் சைட் சீயிங் எல்லாம் முடிச்சு 7.00 மணி வாக்குல ரூமுக்கு வந்து சேந்தோம்.




அன்னைக்கு நைட் கேம்ப் ஃபயரோட சிக்கன் பார்பெக்யூவும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. முதல் நாள் பயணக்களைப்பால தூங்கப் போனவங்க எல்லாருமே அன்னைக்கு உற்சாகமா காத்துட்டு இருந்தாங்க. ரைடர்ஸ் எல்லாரும் தங்கள அறிமுகம் செஞ்சுகிட்டு அப்டியே பாட்டு ஆட்டம்னு நடு ராத்திரி வரைக்கும் கொண்டாட்டமாவே போச்சு.அடுத்த நாள் காலைல கொஞ்சம் சீக்கிரம் கெளம்பி மூனாறு வழியா தேனி, போடிநாயக்கனூர் மதுரை வரைக்கும் போறதா திட்டம். ஆனா சதீஷ் அண்ணன் வண்டி பஞ்சர் ஆனதால கொஞ்ச டிலே ஆகி ஒரு வழி 7.00 மணி கிட்ட கெளம்புனோம். மூனாறுல தான் காலை டிஃபன். அதுக்கப்புறம் அங்கிருந்து தேனி போடிநாயக்கனூர் வழியா மதுரைக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப ரொம்ப அழகான மலைப் பாதைப் பயணாம் அது. டீ எஸ்டேட்டுகளுடைய பசுமைக்கு நடுவுல... கொஞ்சம் குளிர்.. கொஞ்சம் வெயில்...ரெண்டையும் மாத்தி மாத்தி அனுபவிச்சபடி... ஒரு மாதிரி வெளிர் ஊதா நிற பூக்கள் ரெண்டுபக்கமும் கொட்டிக்கிடந்த ஈரமான சாலைகள்ல வண்டியோட்டுன அனுபவம் இருக்கே.....!! அடடா... கண்டிப்பா வாழ்க்கைல ஒரு முறையாவது அத அனுபவிச்சே தீரனும்.


அங்கிருந்து இறங்கி மதுரைக்கு வெளில மத்தவங்க வர்ரதுக்காக காத்திருக்கும்போது லேசா மழை தூர ஆரம்பிச்சுது.அப்டியே நனைஞ்சபடியே வண்டியோட்டுனோம்.மத்தியான சாப்பாடு திண்டுக்கல் பொன்ராம்ல .ஹரி அவருடை இன்ஃப்ளூயன்ஸ பயன்படுத்தி எங்களுக்காக பிரியாணி ப்ளாக் பண்ணி வெச்சுருந்தாரு. ஒருவழியா சாயந்திரம் 4.30க்கு தான் அங்க வந்து சாப்புடவே ஆரம்பிச்சோம்.சாப்ட்டு முடிச்சு அங்கிருந்து கெளம்பி அப்டியே NH45 பிடிச்சாச்சு. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை தான்.அங்கங்க டீ சாப்புட நிறுத்திப்போம். திருச்சிக்கு உள்ள போனா ட்ராஃபிக்ல் மாட்டிப்போம்னு முன்னாடியே மனப்பாறைல ஒரு ஸ்டேட் ஹைவேல திரும்புனோம். பொதுவா ஸ்டேட் ஹைவேஸ்னாலே எதிர்பக்க ட்ராஃபிக், மோசமான ரோடுன்னு கடுப்பேத்துற விஷயங்கள் இருக்கும் ஆனா இந்த ரோடு ஏதோ நந்தவனத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி ரெண்டுபக்கமும் அடர்த்தியா மரங்களோட ஏதோ கே.கே நகர் நிழல்சாலை மாதிரி இருந்துச்சு. ஒரே ஸ்ட்ரெட்ச்ல மறுபடியும் NH வந்து சேந்தோம். அங்க ஊருக்கு வெளில ஒரு டீ ப்ரேக் எடுத்துகிட்டு கிளம்புனோம். இங்க தான் எங்க லீட் பிரசாத் ஒரு ட்ரிக் ப்ளான் போட்டாரு.”அடுத்து நாம் செங்குறிச்சி டோல் ப்ளாசா தாண்டி தான் நிக்க போறோம்.இங்கிருந்து அது 80 கிலோ மீட்டர். இது நான் ஸ்டாப் லெக்” அப்டின்னு எலார்கிட்டயும் சொல்லிட்டாரு. ஆனா நெஜம்மா அங்கிருந்து 110 கிலோமீட்டருக்கு அப்புறம் தான் செங்குறிச்சி. நான் சும்மா வெரட்டு வெரட்டுன்னு போய்க்கிட்டே இருந்தேன்.வாழ்க்கைல முதல் முறையா 100 கிலோமீட்டருக்கு மேல நான்ஸ்டாப் ரைட் போனது அப்போ தான். மத்த 350 cc வண்டிக்கு முன்னாலயே வந்து சேந்தேன். கொஞ்ச நேரம் மத்தவங்களுக்காக காத்திருந்தோம். அப்புறம் கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற A2Bல டின்னர் முடிச்சு கரெக்ட்டா கெளம்புற நேரத்துல செம்ம மழை. என்கிட்ட ரெய்ன் கோட் இருந்துச்சு.. டக்குன்னு எடுத்து மாட்டிகிட்டேன். எல்லாரையும் போலாம் போலாம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்ச பேருக்குத் தயக்கம். எனக்கும் உள்ளுக்குள்ள மழைல வண்டியோட்ட பயந்தான். ஆனாலும் ஒரு ஆசை.

ஒரு வழியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கிளம்பும்போது மணி 10.30க்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சென்னைக்கு 273 கிலோ மீட்டர் இருந்துச்சு. மழையினால யாரும் வேகமா போறதில்லன்னும் பொறுமையாவே போய்க்கலாம்னும் பேசி முடிவு பண்ணிகிட்டோம். மழை விட்டு விட்டு தூத்தல் போட்டபடியே இருந்துச்சு. ஹெல்மெட் வைசர்ல தண்ணி ஓடிகிட்டே இருக்கும். எதிர்பக்கத்துல வர்ர வாகனங்களுடைய வெளிச்சம், நம்மள தாண்டி போற பெரிய வாகனங்கள் வாரியிறைக்குற அழுக்கு தண்ணி, சரியான பிடிமான இல்லாம வழுக்க தயாரா இருக்குற சாலைன்னு, ஹெல்மெட் வழியா பின் கழுத்துல இறங்கி உள்ளாடை வரைக்கும் நனைக்குற மழை தண்ணின்னு இத்தனையையும் சமாளிச்சு தான் வண்டியோட்னோம்.மழைக்கு முன்னாடி வரைக்கும் பேயோட்டு ஓட்டிக்கிட்டிருந்த நான் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பம்ம ஆரம்பிச்சேன். எந்த லாரியையும் ஓவர்டேக் பண்ணி முன்னாடி போறதுக்கே பயமா இருந்துச்சு. ஹரிஷ் மணி அண்ணாத்த இத கவனிச்சுட்டாரு. என் பக்கத்துல வந்துட்டு என்ன guide பண்ண ஆரம்பிச்சார். ஒவ்வொரு லாரியை ஓவர் டேக் பண்ணும்போதும் பக்கத்துலயே அவரும் வருவார். தாண்டுன உடனே ஒரு thumbs up காட்டுவாரு. இப்டியே பொறுமையா ஒட்டிகிட்டு வந்தோம். மழை கொஞ்சம் விட்டவுடனே பழையபடி விரட்ட ஆரம்பிச்சோம். வண்டி டயர்லயும் கொஞ்சம் பிடிமானம் கிடைக்க ஆரம்பிச்சுது.

ஒருவழியா அதிகாலை 2.30 மணிக்கு மேல்மருவத்தூர் வந்து சேர்ந்தோம். அங்க ஒரு வண்டிக்கு சின்னதா ஒரு fall.அதனால காஃபி ப்ரேக், வண்டி ரெடி பண்ற நேரம், ஈர சட்டைய மாத்திக்கிற நேரம்னு எல்லாம் சேர்த்து ஒரு நேரத்துக்கு மேல ஆச்சு. மழை சுத்தமா விட்டுடுச்சு.ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணி போல கடைசியா எல்லாரும் மதுரவாயல் டோல் கேட்கிட்ட அசெம்பிள் ஆனோம். ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிட்டு கைகுலுக்கி பிரியாவிடை சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். V11 ஷோரூம் உடைய மேனேஜிங் பார்ட்னர்ஸ் பிரபுவும், ஹரியும் அவங்க கார்ல எங்ககூட வந்திருந்தாங்க. அவங்களும் கடைசிவரைக்கும் இருந்து எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு தான் கெளம்புனாங்க. நான் கே.கே நகர் வந்து சேரும்போது மணி 5.30. நிறைய களைப்போடவும் அட்டகாசமான அனுபவங்களோடவும் கிட்டத்தட்ட 1400+ கிலோ மீட்டர் பயணம் செஞ்சுட்டு வீட்டுக்கு வரும்போது மனசுல ஒரு இனம்புரியாத அமைதி. அடுத்த ட்ரிப்பை எதிர்ப்பார்த்தபடி வண்டிய ஏத்தி போட்டுட்டு வந்து படுக்கைல விழுந்தேன்.


அடுத்த ட்ரிப்ல சந்திப்போம்....!!

மேலும் படங்கள் இங்கே

திங்கள், 29 ஜூன், 2015

இசை சூழ் தனிமை - 3


இந்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ (அது ஒரு மொக்க படம்னாலும்) படத்துல வர பாட்டு எல்லாம் கேட்ருப்பீங்க. ’யாரோ இவள் யாரோ இவள்’ பாட்டு ஆரம்பிக்கும்போது கிஜ்மாஜாரே ராக்கோஓஓஒ ந்னு ஏதோ புரியாத பாஷைல ஒரு சின்ன ஹம்மிங் பிட் வரும்... நான் போன வாரம் ‘நீலாகாசம் பச்சக்கடல்.. சுவண்ணபூமி’ன்னு துல்கர் சல்மான் நடிச்ச ஒரு மலையாளப் படம் பாத்துட்டு இருந்தேன். கேரளாலேர்ந்து அவருடைய காதலியைத் தேடி நாகலாந்து வரைக்கும் போவாரு...! அப்போ கொல்கத்தாவுக்கு முன்னாடி ஒரு ஊர்ல இவங்க தங்கிருக்கும் போது ஒரு குழப்பமான மனநிலைல ஹீரோ வெளில வருவாரு. அங்க கேம்ப் ஃபயர் போட்டுட்டு ஒரு நாடோடிகள் கூட்டம்.. கஞ்சா புகைத்தபடி... ஏக்தாராவை (நயன்தாரா மாதிரி நடிகை அல்ல, இசைக்கருவி) வாசித்தபடி.. இந்த பாட்டை பாடுவார்கள்... ‘அமி ஹ்ரித் மாஜ்ஹாரே ராக்ஹ் போ.. ச்ஹேரே தெப்ஹோ னா’ அப்டின்னு...!அந்த பாட்டு தர அந்த உணர்வு இருக்கே..அத வார்த்தைல சொல்றது ரொம்பக் கஷ்டம்.

இந்த வீடியோவுல கரெக்டா 6.36 ல நான் சொன்ன அந்த பாட்டு வரும் பாருங்க.
அதுக்கப்புறம் அந்த பாட்டு வரிய கூகிள் பண்ணதுல.. அது ஒரு வங்காள மொழி நாட்டுப்புறப் பாடல்னு தெரிஞ்சுது. அப்டியே இந்த மாதிரி பாடல்களைப் பாடித்திரிகிற ‘பவுல்’ (Baul) என்கிற ஒரு குழுவினர் பத்தியும் தெரிஞ்சுது. இந்த பவுல் துறவிகள் எல்லாம் கிட்டத்தட்ட சூஃபிகள் மாதிரி இசை+ஆன்மிகம்னு திரியுறவங்க. இந்து மதம், புத்த மதம், சூஃபியிஸம், எல்லாத்தோட தாக்கமும் இருந்தாலும் இவங்க குறிப்பிட்ட எந்த மதத்தோடவும் தங்களை அடையாளப் படுத்திக்கிறது இல்ல.அதுல ஒருத்தர், லக்கன் தாஸ் பவுல் (Lakhan das baul) அமெரிக்காவுல போய் பாடுன இதே பாட்டுடைய வெர்ஷனை மறக்காம கேட்டுப் பாருங்க.ரொம்ப ரொம்ப soulful singing..!! 

இந்த பவுல்களுடைய தோற்றம்னு பார்த்தா.. வங்கதேசமும்... இந்தியால மேற்கு வங்க மாநிலமும் தான். இன்னைக்கு உலகம் பூரா பரவி இருக்காங்க.இன்னொரு அழகான பவுல் பாடல் ஜும்ப்பா லஹிரியுடைய (Jhumpa lahiri) 'The Namesake’ நாவலுடைய திரை வடிவத்துல வர மோன் தோலே (Mon dole). அதையும் கேட்டுடுங்க.இதுவும் லக்கான் தாஸ் பாடுனது தான்.

பவுல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரை இங்கே:

இன்னும் கொஞ்சம் விரிவான ஆய்வுக் கட்டுரை:

அந்த 'ஹ்ரித் மஜாரே' பாடலுடைய வரிகள் இங்கே:

சனி, 2 மே, 2015

வால்ட் டிஸ்னியின் மேரி பாப்பின்ஸ்



Courtesy: http://tweethope.com/
ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு புதிய படைப்பை உருவாக்கும் போது முழு சுதந்திரத்துடனும் தாங்கள் விரும்பியதை உயிர்ப்பிக்கின்ற உரிமையுடன் தான் செயல்படுகிறார்கள்.தான் வரைகின்ற கேன்வாஸில் இன்ன இடத்தில் இந்த பொருள் அல்லது இந்த நிறம் தான் இருக்கப் போகிறதென தீர்மானிப்பது அந்த ஓவியரின் விருப்பம்.அது அவரது உரிமையும் கூட.ஒரு சிறுகதை அல்லது நாவல் எழுதுகிற எழுத்தாளருக்கும்,ஒரு கவிஞனுக்கும்,ஒரு திரைப்படத்தை எழுதி இயக்குகிற இயக்குநருக்கும் கூட இது பொருந்தும்.

இதில் ஒரு படைப்பை வேறொடு படைப்பாளி எடுத்தாளும்போது நேர்கிற சிக்கல்கள் சாதாரணமானவையல்ல. உதாரணம் ஒரு நாவல் அல்லது சிறுகதை அல்லது நாடகம் திரைப்படமாக்கப் படும்போது வருகிற  கருத்து வேறுபாடுகள் அல்லது ஒரு மொழியில் எடுக்கப்படுகிற திரைப்படத்தை வேறு மொழியில் மறுவுருவாக்கம் செய்யும்போது நேர்கிற மோதல்கள் ஆகியவை.
என்னதான் மோதல்கள் இருந்தாலும் இறுதியாக ஒரு சிறந்த படைப்பின் இரண்டு வேறுபட்ட வடிவங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது ஒரு சிறந்த படைப்பின் சிதைந்த வடிவமும் கிடைக்கலாம்.

இப்போது...
Courtesy: http://schmoesknow.com/

கதை 1

வால்ட் டிஸ்னி... கனவுகளுக்கு உயிரூட்டி வண்ணம் தீட்டி உயிரோடு உலவவிட்ட creative monster/master. தன்னுடைய இரு செல்ல மகள்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு கதையினை குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார். அந்த கதை 'மேரி பாப்பின்ஸ்' என்கிற 1934ல் இருந்து வெளிவந்த கதை வரிசை. எழுதியவர் ஆஸ்த்ரேலியாவில் பிறந்த பெண் எழுத்தாளர் P.L.ட்ராவர்ஸ். (P.L.Travers) Strict and mean lady. யாருக்காகவும் எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாத பெண்மணி. அவரிடம் பேசி சம்மதம் வாங்கி உரிமை பெற்றால்தான் படமாக எடுக்க முடியும். வால்ட் டிஸ்னியின் சமூக அந்தஸ்த்துக்கு இது சாதாரண விஷயமாக நமக்குத் தோணலாம். ஆனால் இதனை சாதிக்க அவருக்கு 20 வருடங்கள் பிடித்தன. 

20 வருட வற்புறுத்தலுக்குப் பின் ட்ராவர்ஸ் தனது படைப்பின் உரிமையைத் தர முன் வருகிறார் ஆனால் கீழ்கண்ட நிபந்தனைகளை விதிக்கிறார்.
1. 100,000 டாலர்கள் அட்வான்ஸ்
2. திரைக்கதையை படித்துப் பார்த்து ஒப்புதல் அளிக்கிற உரிமை
3. அனிமேஷன் கூடாது
4. கதையின் உணர்வுகளை நீர்த்துப்போகச் செய்கிற மாதிரியான இசை கூடாது.

இப்படியான கண்டிப்புகளுக்கிடையே ட்ராவர்ஸின் மேற்பார்வையிலேயே படம் உருவாகின்றது. டிஸ்னி ஒவ்வொரு சின்ன விஷயத்துக்காகவும் போராட வேண்டி வருகிறது. ஒரு வழியாக படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது.

Courtesy: https://getnutmegged.files.wordpress.com

கதை-2

Courtesy: http://cdn.screenrant.com/


1900 களின் தொடக்கம்...
வங்கி ஊழியர் காஃப் (Goff) அவரது மனைவி மற்றும் மகள்களோடு தனது சொந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்குக் குடி பெயர்கிறார். எப்போதும் கொஞ்சம் போதையிலும் நிறைய கனவுகளிலும் மிதக்கிறவன். தனது மகள்களை தேவதை போல... ராஜகுமாரி போல நடத்த விரும்புகிறவன். குறிப்பாக அவனுடைய மூத்த மகள் ஹெலன் மீது அதீத பாசம் கொண்டவன்.அவளும் தந்தையைப் போலவே கற்பனை உலகில் மிதப்பவள். காஃபின் மனைவிக்கு இவர்களின் இந்த போக்கு பிடிப்பதில்லை. இதற்கிடையில் காஃபின் வேலை பறிபோகிறது. நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிறான். ஒரு நாள் இறந்தும் போகிறான்.குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகிறது. ஹெலனின் தாய் தற்கொலைக்கு முயன்று பின் தன் மனதை மாற்றிக்கொள்கிறாள். இந்நிலையில் ஹெலனின் தூரத்து உறவான ஒரு பெண் இவர்களை கவனித்துக் கொள்ளும் பொருட்டு வந்து சேர்கிறார். அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடியவளென ஹெலன் நம்புகிறாள். இந்த அத்தனை நிகழ்வுகளும் சிறுமி ஹெலன் மனதில் ஆழமாக பதிகின்றன.

இந்த இரண்டு கதைகளுக்கான காட்சிகளின் கோர்வையும் இரண்டுக்குமான தொடர்பும் தான் டாம் ஹாங்க்ஸ், காலின் ஃபேரல், எம்மா தாம்ஸன் ஆகியோர் நடித்த 'Saving Mr.Banks' திரைப்படம். ரொம்பவும் எளிமையான அழகான ஒரு feelgood திரைப்படம். ஒரு கதையை திரைப்படமாக்கியதைக் கூட எப்படி சுவாரஸ்யமான திரைப்படமாக்கலாமென்கிற டிஸ்னிகாரர்கள் திறமைக்கு இது ஒரு உதாரணம். நிச்சயம் பாருங்கள்.
   
மேலதிக triviaக்களுக்கு:

http://mentalfloss.com/article/51926/story-behind-saving-mr-banks-starring-tom-hanks-walt-disney
http://www.theguardian.com/books/2013/dec/07/pl-travers-saving-mr-banks-original-mary-poppins

வியாழன், 23 ஏப்ரல், 2015

புல்லட் டைரி - முதல் பயணம் - 1


முன்னறிவிப்பு: இது ஜனவரி மாசம் நான் போய்ட்டு வந்த என் முதல் ரோட் ட்ரிப் பத்தின போஸ்ட்டாக்கும்.



ஏற்கனவே வண்டி வாங்குன கதையப் பத்தி மாங்கு மாங்குன்னு எழுதியாச்சு.வாங்குன வண்டிய நாலு எடத்துக்கு எடுத்துட்டு போனா தான அதுக்கொரு மரியாத. அதனால வண்டில ஊர் சுத்துறதுக்காக ஒரு க்ரூப்பைத் தேடிக் கண்டுபிடிச்சேன். 'V11 Royal Enfield Riders Club' - வேலவன் மோட்டார்ஸ் கூட சேந்து இன்னபிற புல்லட் காதலர்கள் தொடங்குன க்ரூப் தான் இது. அந்த குழுவுடைய மூன்றாவது வருட நிறைவு நாள் ஜனவரி 26 அன்னைக்கு. அதே நாள் V11 குழுவுடைய Core member ஹரிக்கு மதுரைல கல்யாணம். இது எல்லாத்தையும் கனெக்ட் பண்ற மாதிரி ஒரு ரோட் ட்ரிப் ப்ளான் பண்ணாங்க, எங்க ரைடர்ஸ் க்ளப்போட வாட்சப் க்ரூப்ல அறிவிப்புகள் வெளியாச்சு. எப்படா ஊர் சுத்த சான்ஸ் கெடைக்கும்னு காத்திருந்த நான் உடனே வரேன்னு பெயர் குடுத்துட்டேன். ஆனா இது ஒரு long distance ride ங்குறதுனால Full faced helmet, Gloves, Knee Pad, Padded Jacket, ஆகிய பாதுகாப்பு கவசங்கள்லாம் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாங்க.



அதுக்கப்புறம் ஒன்னொன்னா வாங்க ஆரம்பிச்சேன்.ஒருவழியா அந்த பர்சேஸ் முடிஞ்சுது. எப்பவுமே இந்த மாதிரி ரோட் ட்ரிப்புகளுக்கான வழியை முன்னாடியே பேசி முடிவு பண்ணிடுவாங்க. வெறும் நேஷனல் ஹைவே மட்டும் இருந்தா போர் அடிச்சுடும்னு கொஞ்ச தூரம் ஸ்டேட் ஹைவேஸ்; அப்புறம் கொஞ்சம் கிராமங்கள் வழியா போற மாதிரி கரடுமுரடு சாலைகள்; ஒரு வேளை நாம போறது மலைவாச ஸ்தலமா இருந்தா மலை சாலைகள்; இப்டி எல்லாமே கலந்துகட்டி இருக்குற மாதிரியா பாதையை தான் தேர்ந்தெடுப்பாங்க. போகும் பாதை எப்பவுமே தூரமானதா கொஞ்சம் சுத்துவழியா தான் இருக்கும்.ட்ரிப் முடிஞ்சு திரும்பி வரும்போது எல்லாருக்குமே ரொம்ப களைப்பா இருக்கும்ங்குறதுனால நேர் வழியா, ஒரே நேஷனல் ஹைவேல வர மாதிரி இருக்கும்.


இதையெல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. 23ஆம் தேதி காலைல 5.00 மணிக்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அதுக்கப்புறம் அப்படியே போரூர் சிக்னல் வழியா பூந்தமல்லி பைப்பாஸ பிடிச்சு போறதுதான் ப்ளான்.அங்க tollgate பக்கத்துல சின்னதா ஒரு gathering.அவ்ளோதான்.

இந்த இடத்துல இன்னொரு தகவல்.இந்த மாதிரி பைக் ட்ரிப்புல மொத்த குழுவையும் வழிநடத்திட்டு முன்னாடி போறவங்கள 'Lead'னு சொல்லுவோம்.எந்த வழியா போறோம்.. எங்க ப்ரேக் எடுக்குறோம்.. எந்த ஸ்பீட்ல போகனும்னு எல்லாத்தையும் லீட் தான் மத்த ரைடர்ஸ்கூட பேசி முடிவு பண்ணுவாங்க.பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் தான் லீடா இருப்பாங்க. அதே மாதிரி எல்லா ரைடர்ஸையும் பத்திரமா அனுப்பி வெச்சுட்டு பின்னாடி கடைசியா வரவங்களுக்கு 'Sweeper'னு பேரு. இந்த ஸ்வீப்பரா வரவங்க பெரும்பாலும் மெக்கானிக்கா தான் இருப்பாங்க. அவங்கிட்ட கொஞ்சம் ஸ்பேர்ஸ், இஞ்சின் ஆயில், பெட்ரோல் கொஞ்சம், எல்லாமே இருக்கும். இது ஏதும் வண்டி breakdown ஆனா அதுக்கான safety backup.


இப்போ  back to எங்க ட்ரிப். என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு வண்டி.ராஜா தான் இந்த ட்ரிப்புக்கு லீட். ஸ்வீப்பர் வேலவன் மோட்டார்ஸ் டெக்னீஷியன் கார்த்திக்.வெயிலுக்கு முன்னால எவ்ளோ தூரம் கவர் பண்ண முடியுமோ பண்ணிடலாம்னு சொன்னாங்க. தட தடன்னு கெளம்புனோம். அதுக்கப்புறம் அங்கங்க டீ ப்ரேக், ரீஸஸ் ப்ரேக்லாம் எடுத்தாலும் காலை உணவுக்கு திருவண்ணாமலை போய் சேர்ந்தாச்சு.9.00 மணி வாக்குல போய் சேர்ந்தாச்சு.அது முடிஞ்சு 11.00 மணி ஆகும்போது கள்ளக்குறிச்சி. டீ குடிக்க நிறுத்துனோம். செம்ம மழை ஆரம்பிச்சுது. பின்னாடி கட்டியிருந்த பேகுக்கு ஒரு பாலித்தீன் கவரப்போட்டு கவர் பண்ணிட்டு மழை விட்டதும் வண்டிய கெளப்புனோம். மதியம் சாப்பாட்டுக்கு சேலம் செல்வி மெஸ் போயிட்றதா திட்டம். வெற்றிகரமா 2.00 மணி கிட்ட போய் சேர்ந்தோம். சாப்ட்டு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையை புடிச்சு ராசிபுரம் திருச்செங்கோடு வழியா வத்தலகுண்டு போய் சேர்ரதுதான் தான் ப்ளான். அப்பவே மழை பெய்ய ஆரம்பிச்சு எங்க வேகம் குறைஞ்சிடுச்சு.நடுவுல நேஷனல் ஹைவேலேர்ந்து பிரிஞ்சு ஸ்டேட் ஹைவேஸ்ல போக வேண்டிய சூழ்நிலை. Opposite traffic வேற கடுப்பேத்துது.இத்தனைக்கும் நடுவுல ஒரு வழிய 8.00 மணிக்கு கரெக்ட்டா வத்தலகுண்டு வந்து சேரும்போது என் க்ளட்ச் கேபிள் கட் ஆயிடுச்சு.

அப்புறம் அத மாத்திகிட்டு அங்கிருந்து கெளம்பும்போது மணி 9.00க்கு மேல.இன்னும் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் மலைப் பாதைல வண்டியோட்டனும். எனக்கு நார்மல் ரோடே பயங்காட்டும். Ghat ரோடு இன்னும் பிரமாதம். Two way traffic வேற. சக ரைடர்கள் குடுத்த தைரியத்துல மலை ஏற ஆரம்பிச்சேன். 40-50 லயே வண்டிய உருட்டிட்டுப் போய் ஒருவழியா 11.00 மணிக்கு நாங்க புக் பண்ணிருந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.அடுத்த நாள் முழுக்கு ரெஸ்ட் எடுக்குறது தான் திட்டம்.ஆனாலும் பகல் 11.00 மணிக்கு மேல போரடிக்க ஆரம்பிச்சதுனால நாங்க நாலு பேர் மட்டும் லோக்கல் sight seeingக்கு கெளம்பி போனோம்.



 ஊர சுத்தி முடிச்சு சாயந்திரம் வந்து ரூமடைஞ்சாச்சு.அடுத்த நாள் காலைல மதுரை கிளம்புறதா முடிவாச்சு.ஆனா வழக்கமான பாதை இல்லாம வேற வழியில போலாம்னு உள்ளூர் மக்கள் கிட்ட  விசாரிச்சு தாண்டிக்குடி வழியா கீழ இறங்க முடிவாச்சு.








வழக்கமான ghat roads மாதிரி இல்லாம இது கொஞ்சம் கரடு முரடான ரோடு.ஒவ்வொரு வளைவும் சும்மா 180 டிகிரிக்கு நம்மள சுத்தியடிக்கும்.ரொம்பக்  குறுகலான சாலை.ஒரு பக்கம் பகீர் பள்ளத்தாக்கு. கொஞ்ச தூரம் போன இடது பக்கம் ஏதாவது நீர்நிலை இருக்கும்.திடீர்னு ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு இருக்கும்.இப்படியாக mother nature kept surprising us with her fantastic creations. 1.00 மணி ஆகும்போது ஒட்டன்சத்திரம் வந்து சேந்தோம்.அம்மா மெஸ்ல மத்தியான சாப்பாடு.அடுத்தது வேடசந்தூர், தாடிக்கொம்பு, பேகம்பூர் வழியா மதுரைக்கு போய் சேர்றதுன்னு முடிவாச்சு.



சாயந்திரம் இருட்டுறதுக்கு முன்னாடியே மதுரைக்கு போய் சேந்தாச்சு. அப்புறம் கல்யாண வீட்டுகாரங்க புக் பண்ணி வெச்சிருந்த சர்வீஸ்டு அப்பார்ட்மென்ட்க்கு போய்  refresh ஆய்ட்டு கல்யாண reception க்கு போய்ட்டு வந்தோம்.





அடுத்த நாள் காலைல கல்யாணத்த அட்டெண்ட் பண்னிட்டு உடனே சென்னை கிளம்பறதா இருந்ததனால நான் riding gears எல்லாம் போட்டுட்டே தான் மேடையேறுனேன். ஒரு வழியா சாப்பாடெல்லாம் முடிஞ்சப்புறம் NH45 பிடிச்சோம்.அங்கங்க re-fuel பண்ண வண்டிய நிறுத்துனதோட சரி.100 கிலோமீட்டருக்கு மேல தான் ப்ரேக் எல்லாம். கடைசியா சாயந்திரம் 99km கடைல காஃபிய குடிச்சுட்டு அடுத்த ஸ்டாப் சென்னைன்னு சொல்லிகிட்டு பிரிஞ்சோம். சிட்டி கிட்ட வந்தப்புறம் மறைமலை நகர்ல ஒரு மெகா நற்செய்திக் கூட்ட மாநாடு. செம்ம ட்ராஃபிக் ஜாம். எப்படா வீட்டுக்குப் போய் சேருவோம்னு இருந்த எங்களுக்கெல்லாம் செம்ம கடுப்பு. ரோட்ட விட்டு சைட்ல வண்டிய எறக்கி ஓட்ட ஆரம்பிச்சோம். அப்டி இப்டின்னு கத்திப்பாரா கிட்ட வந்து சேரும்போது நைட்டு 10.00 மணி ஆயிடுச்சு.வெற்றிகரமா என்னுடைய முதல் லாங் ரைட் முடிச்சுட்டு வீட்டுக்கு  வந்து சேந்தேன்.

ஒட்டுமொத்தமாவே இது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நெடுந்தூர பயணம் நிஜம்மாவே இவ்வளவு விஷ்யங்கள் கத்துக் கொடுக்கும்னு அப்போ தான் புரிஞ்சுது.வெவ்வேற வானிலைல... வேற வேற மாதிரி சாலைகள்ல.. வித்தியாசமான சூழல்ல எல்லாம் பயணப்பட்டு கடைசியா நாம சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேரும்போது ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கையையே வாழ்ந்த மாதிரி உணருவோம். பயணத்தைத் தவிர வேறெதுவும் இந்த உணர்வைத் தருமான்னு தெரியல.
- தொடரும்


செவ்வாய், 24 மார்ச், 2015

The Invisible Other - தமிழ் சினிமாவில் சாதி - ஆவணப்படம்



நேத்து ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.என்னால முடிஞ்சளவுக்கு என் நண்பர்களையும் வரச்சொல்லியிருந்தேன்.Catalyst Study Circle அமைப்பு ஏற்பாடு செஞ்சிருந்த 'The Invisible Other: Caste in Tamil Cinema' ன்னு ஒரு ஆவணப்பட திரையிடலுக்காக தான் இந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் ரஞ்சித் பேசுறதாகவும் சொல்லியிருந்தாங்க.

ஆவணப்படம் பேசுற விஷயங்கள்...
  • ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவுல சாதியின் தாக்கம் எந்தளவு இருக்கு ? 
  • பல்வேறு சாதிகள் திரைப்படம்ங்குற ஒரு கலை வடிவத்தை எப்படி தங்களுடைய சாதிகளை glorify பண்ணி பெருமையடிச்சுக்கறதுக்காக பயன்படுத்தியிருக்காங்க ?
  • இது சமூகத்துல பல்வேறு நிலையில இருக்குற மக்களை எப்படி போய் சேருது ? அதனால ஏற்பட்ற தாக்கம் என்ன ?
  • சாதி தொடர்பான விஷயங்களை திரைப்படங்கள்ல புகுத்துறதுக்கும் பேசுறதுக்கும் சென்சார் போர்ட் என்ன மாதிரியான பாரபட்சமான கெடுபிடிகளைக் கையாளுது ? 
  • அங்க இருக்கிற அதிகாரிகளுடைய அரசியல் பார்வை என்ன ? கொள்கை என்ன ?
  • தேவர்மகன் திரைப்படம் தொடங்கி இதுவரைக்கும் வெளிவந்த சாதி சார்ந்த விஷயங்களைத் தூக்கிப்பிடிக்குற திரைப்படங்கள் சொல்ல வர்ர விஷயம் என்ன?






நான் ஒரு வாரம் முன்னாடி தான் யூட்யூப்ல படத்தப் பாத்திருந்தேன்.இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த மாதிரியான ஒரு ஆவணப்படம் ரொம்பவே அவசியம்னு தோணுச்சு.படம் சொன்ன விஷயங்கள் போக, இயக்குனர் ரஞ்சித் பேசுனது எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள். அவர் பேசுனதுல எனக்கு ஞாபகமிருக்குறது கொஞ்சம்,

 “தலித் அப்டிங்குற வார்த்தையையே சினிமாவுல பயன்படுத்த முடியாது,அதுக்கே அவ்வளவு கெடுபிடிகள் இருக்கு.ஆனா மத்த இடைநிலை சாதிகள் பெயரை படத்துல சொல்றதுக்கோ அல்லது அவங்கவங்க சாதிகளைப் பத்தி பெருமையா பேசுறதுக்கோ எந்தத் தடையுமில்ல.அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.”

”அதேமாதிரி ஒரு மதத்துல கல்வி மறுக்கப்படுற ஒருத்தனுக்கு, அந்த கல்வியையும் சமூக அங்கீகாரத்தையும் வேற மதம் குடுக்குதுன்னா அத அவன் மேல வரதுக்கான ஒரு வாய்ப்பா தான் பாக்குறான்.அந்த மதத்தை தேர்ந்தெடுத்துக்குறதுக்கான எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு.அதை தப்பா பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கு?”

”ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவங்களைப் பார்த்து தயவு செஞ்சு பரிதாபப்படாதீங்க.அதே மாதிரி அவங்களுக்கான பிரச்சனையை நீங்க அவங்ககிட்ட தான் பேசனும்னு இல்ல,அவங்களுக்கு அவங்க பிரச்சன என்னன்னு நல்லாவே தெரியும்.அதுக்கான தீர்வுகளை ஒரு அமைப்புக்குள்ள இருக்க நீங்க தான் கொண்டுவர முடியும்.”

"தமிழ் திரை உலகத்துல ஒரு iconic ஸ்டேட்டஸை அடைஞ்சிட்டதா சொல்லப்பட்ற இயக்குனர்கள் பெரும்பாலானவங்க அவங்க படங்களை அப்பட்டமான ஒரு சாதிமத சார்போட தான் எடுக்குறாங்க.தங்களுடைய சாதிப்பெருமையை நேரடியாவே தங்களுடைய படங்கள் மூலமா பேசுறாங்க.அவங்களை எந்த ஊடகமோ பத்திரிக்கையோ எந்தக் கேள்வியும் கேக்குறதில்ல.என்ன மாதிரி இருக்குறவங்க கிட்ட தான் தேடி வந்து கேப்பாங்க. ”

இன்னும் நிறைய முக்கியமான விஷயங்களைப் பேசுனாரு. ’நான் மகான் அல்ல’ படம் வெளிவந்தப்போ கருந்தேள் ராஜேஷ் எழுதுன விமர்சனத்தைப் படிச்சுட்டு அதுக்காக இயக்குனர் சுசீந்திரனுக்கு தான் எழுதுன கடித்தை ராஜேஷுக்கு அனுப்பியதையும் , அதை  ராஜேஷ் அவருடைய தளத்துல வெளியிட்டப்போ அதுக்கு வந்த எதிர்வினைகளையும் பத்தி குறிப்பிட்டு சொன்னாரு.பெரும்பாலானவங்க ‘நீங்க தலித்தா இருக்குறதனால எல்லாத்தையும் அதே கண்ணோட்டத்துல பாக்குறீங்க’ன்னு குறை சொன்னதாக சொன்னாரு.

நேரம் கிடைச்சா அந்த ஆவணப்படத்தை யூட்யூப்ல பாத்துடுங்க. எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், இயக்குனர் ஜனநாதன், நடிகர் நாசர், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், சில பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள்னு பல்வேறு தரப்பு மக்களுடைய கருத்துகள், திரைப்படக் கல்லூரி மாணவர்களுடைய விவாதம், தமிழ் திரைப்படங்கள்ல இதுவரைக்கும் வந்த சாதி தொடர்பான க்ளிப்பிங்க்குகள்னு நிறைய தகவல்களை கோர்வையா சொல்லியிருக்காரு இந்த ஆவணப்படத்தை இயக்கிய சுரேஷ். அவருடைய வலைத்தளம் இங்கே.
Catalyst Study Circle அமைப்புடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

'The Invisible Other: Caste in Tamil Cinema'




Related Posts Plugin for WordPress, Blogger...