நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 18 மார்ச், 2017

பதிலற்ற கேள்விகள் - Exhortation

நான் பேசித்தீர்க்கிற வார்த்தைகளை
கேட்க யாருமற்ற பொழுதுகளே
கடிதமெழுத உந்தித்தள்ளி
உறக்கமற்ற இரவுகளைப் பரிசளிக்கின்றன.
https://in.pinterest.com/pin/523965737873453107/

பேரன்பின் பார்ட்னருக்கு,


மீண்டும் ஓர் கடிதமெழுத வாய்த்ததை எண்ணி மகிழ்வதா அன்றி வருந்துவதாவெனத் தெரியாத நிலையில் எழுதத் தொடங்குகிறேன் பார்ட்னர்.புத்தகங்களுள் மூழ்கிவிடமுடியாத, பாடல்களில் கரைந்துவிடமுடியாத, திரைப்படங்களில் தொலைந்துவிட முடியாத இரவுகள் மிகக் கொடுமையானவை . ஒரு பக்கம் மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்திருந்தாலும் மறுபக்கம் ஈடுசெய்யமுடியாத இருன்மையும் தனிமையும் சூழ்ந்தழுத்தித் திணறடிக்கின்றன. நான் ஓடிக்கொண்டிருக்கிற பாதையில் இலக்கென நான் நினைக்கிற இலக்குகளையும், வெற்றி என நான் நினைக்கிற வெற்றிகளையும், சாதாரணர்கள் தங்கள் அளவுகோல்களால் அளந்து ஒதுக்கி உதாசீனப்படுத்திவிடுகின்றார்கள். அன்னோரின் அறுவை சிகிச்சைக் கேள்விகளுக்கு அருஞ்சொற்பொருள் சொல்லும் நிலையில் நான் இல்லை பார்ட்னர். ”அதென்னடா.. விளக்கங்களுக்கும் பதில்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிற ஆணவமுனக்கு ? கடவுளா நீ ?” எனக் கேட்பாயானால் வெறுமையாகச் சிரித்தபடி ”அற்பன்” என்பேன் பார்ட்னர்.

அவ்வப்போது நிறைகிற காரணமில்லாத கண்ணீருக்கே இன்னும் பதிலறியாதவன் நான். ஒரு கட்டத்துக்கு மேல் வாழ்க்கையாலும் சுற்றத்தாலும் ’வளர’ நிர்ப்பந்திக்கப் படுகிற கனவுலாவிகளால் நிஜங்களின் வெம்மையை கொஞ்சமும் தாங்கமுடியாது பார்ட்னர். நான் எப்போதும் பதிலளிக்கத் தயாராயிருக்கிற கேள்விகளை உன்னையன்றி யாரும் கேட்டதில்லை... கேட்பதில்லை...அல்லவா ? எப்போதும் தனிமையையும் துயரத்தையுமே உன்னோடு பகிர்கிறேனென நினைக்காதே. மனங்கொள்ளா மகிழ்ச்சியான ஓர் கனத்தில்  அருகே நீயில்லாமல் தவித்துப் போனேன் பார்ட்னர். ’சலங்கை ஒலி’ திரைப்படம் பார்த்திருப்பாயென நினைக்கிறேன். தனக்கான முதல் வாய்ப்பு கிடைத்துவிட்டதை அறிந்த அக்கனத்தில் அந்த மகா கலைஞன் தன் அருகிலிருக்கிற தேவதையின் கைகளைப் பற்றி முகம் புதைத்து குலுங்கியழுவான். அப்படியொரு நிகழ்வு நீயிருந்திருந்தால் நடந்தேறியிருக்கக் கூடும் பார்ட்னர்.

போகட்டும்; நடக்கவிருக்கிற நல்லவைகளுக்கு இஃதோர் தொடக்கமென மனந்தேற்றிக் கொள்ளுகிறேன். பதில்களையும் விளக்கங்களையும் குறித்த என்னுடைய நிலைப்பாட்டையே நான் உன்னிடத்திலும் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர். எவ்வகையிலும் நீயெனக்கு மறுமொழி சொல்லவேண்டிய நிர்ப்பந்தமில்லை. கதை கேட்க சற்றே நீ மனந்தந்தால் போதுமெனக்கு. உன் வானத்து நிலவொளியை நான் மறைக்க விருப்பமில்லை. உன் வானம் உனக்கு. என் வானம் எனக்கு, பொதுவாய் இரவின் கீழ் கதை கேள் அது போதும்.

பூஞ்சையான மனங்கொண்ட மனிதர்கள் எடுக்கிற அதிதீவிர முடிவுகளைக் குறித்தான அச்சமும் ஆச்சர்யமும் எப்போதும் எனக்கு உண்டு. அம்மென்மனங்களை அந்நிலைக்குள்ளாக்குமளவு என்ன துயரம் இருந்துவிடப்போகிறதென யோசித்தவனுக்கு இப்போதுதான் சாமான்யர்களின் உலகத்து நியதிகள் விளங்க ஆரம்பிக்கின்றன பார்ட்னர். காலவோட்டத்தின் ஓவ்வொரு சுழற்சியிலும் எனக்காக நான் செய்கிறவையன்றி இந்த உலகுக்கு நான் என்னை நிரூபித்துக்கொள்ளும்பொருட்டு செய்யப் பணிக்கப்படுகிறவற்றை எல்லாம் முற்றிலும் வெறுக்கிறேன். ” உங்கள் சில்லறை உலகில் நான் இல்லை. விட்டுவிடுங்கள்” என ஏதோவோர் கவிஞன் மன்றாடியதாய் நினைவு. நமக்கான கனவை எப்போதும் யாரும் காணவே முடியாது பார்ட்னர்.
எழுத்தாளர்களின், குறிப்பாய் கவிஞர்களின் பிறழ்வுநிலை குறித்து சமீபத்தில் நிறைய அறியநேர்ந்தது. பெரும் கவிஞர்களும் கனவுவாதிகளும் தங்களை புற உலகத்தினின்று விலக்கியே வைத்திருந்ததன் காரணம் விளங்கத் தொடங்குகின்றது பார்ட்னர். நானும் என்னை ஓர் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துகொண்டு புற உலக சப்தங்களினின்று விடுபட்டு நடமாட விரும்புகின்றேன்.நானொன்றும் மகா படைப்பாளியென என்னைச் சொல்லிகொள்ளவில்லை. என் கனவுகளை நான் வாழும் பொருட்டே என்னைச் சார்ந்தோரின் கனவுகளையும் கொஞ்சம் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு அற்ப கனவுவாதி.  நானொரு அற்ப கனவுவாதி பார்ட்னர். அவ்வளவே..!!

மற்றோரின் கேள்விகட்கு பதிலில்லையே அன்றி எனக்கென கேள்விகள் இல்லாமலில்லை.உறவுகளைக் குறித்தும், பிரிவுகளைக் குறித்தும், மனிதர்களின் எண்ணவோட்டம் குறித்தும், கனவுகளைக் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகள் தொடர்ந்து எந்தன் தூக்கம் கெடுக்கின்றன. ஒர் உறவின் மென்னிழை எப்போது பின்னப்படுகிறதென்றும் எப்போது அறுந்துபோகிறதென்றும் யாராலும் சொல்லவே முடியாது பார்ட்னர். ஒரு கட்டத்துக்குமேல் எல்லா உறவுகளின் மேலான பிடிப்பும் அற்றுப்போய்விடுகின்றதல்லவா. என்னைப் பற்றிக் கொள்ள நீளாத கைகளை நானெதற்கு பற்றித்திரிய வேண்டும். கூடச் சிரிக்கவும், கூடிச் சிரிக்கவும், தேடி அழவும், தேவதைகள் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் பார்ட்னர்.

எப்போதோ... யாராரோ... யாராருக்காகவோ... எழுதிய கடிதங்களிலிருந்து எனக்கான வார்த்தைகளை பொறுக்கி சேர்த்துவைத்துக் கொள்கிறேன் நான். முகந்தெரியாதவர்களால் முகந்தெரியாதவர்களுக்காக எழுதப்பட்ட பிரியமும் கோபமும் சோகமும் காதலும் வாதையும் நிரம்பிய வார்த்தைகளே வலியிலுழலும் இந்த வெற்றுத் தனியனுக்கு பேராறுதல் பார்ட்னர். நில்லாத இசையாலும் நீளமான கடிதங்களாலும் சூழப்பட்டு  நெடிந்து நீள்கிற சாலையின் மேலே நான் மிதந்துகொண்டேயிருக்கிற கனவொன்றில் மூழ்க விரும்புகிறேன் பார்ட்னர்.உறக்கமே வாய்க்காதவனுக்கு கனவேது ?

நூற்றி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எழுத்தாளன் ஒருவன் இளங்கவி ஒருவனுக்கு சொன்ன வார்த்தைகளை  இங்கே சொல்ல விரும்புகிறேன் பார்ட்னர்.

”You must not let yourself be diverted out of your solitude by the fact that something in you wants to escape from it. Precisely this desire, if you use it calmly and judiciously as a kind of tool, will help you to extend your solitude over a greater expanse of ground."

"We know little, but that we must hold fast to what is difficult is a certainty that will never forsake us. It is good to be alone, for solitude is difficult; that something is difficult should be one more reason to do it. To love is also good, for love is hard" 

Letters to a Young Poet - Rainer Maria Rilke

இவற்றை எனக்கான வார்த்தைகளாய் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் பார்ட்னர். சாதாரணர்களற்ற என் தனிமை வெளியில் எனக்கான தீர்வை நானே முயன்று கொண்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் உனக்கு. எவ்வகையிலும் உன்னிடமிருந்து ஒரு பதிலை நான் எதிர்நோக்கவில்லை பார்ட்னர்.

என் வானம் எனக்கு. உன் வானம் உனக்கு.

மகிழ்ந்திரு..!!

தேடித் திரியுமொரு தனியனாய்,
நான்.

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...