நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 30 நவம்பர், 2017

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி - SURGE - Sushila Ravindranath


பொதுவாக இந்தியாவில் தொழில்முனைவோர் / தொழிலதிபர்கள் என்றாலே டாட்டா/பிர்லா (வழக்கொழிந்த தேய்வழக்கு) தொடங்கி அம்பானி அதானி வரையிலும் வடநாட்டு உதாரணங்களே முன்னிறுத்தப்படுவதுண்டு. தாராளமயமாக்கலுக்கும் முன்னும் சரி பின்னும் சரி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. உலகலவில் புகழ் பெற்ற பலர் உருவானதும் கோடிகளில் புரளும் வர்த்தகங்கள் உருவானதும் இங்கேயே நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு கொஞ்சமும் சளைக்காதவை உருத்தெரியாமல் போனவர்களின் தோல்விக்கதைகள்.

சுசிலா ரவிந்திரன் எழுதிய 'Surge: Tamil Nadu's Growth Story' என்ற புத்தகம் இப்படியான கதைகளைத் தான் வருடங்கள் வாரியாக தரவுகளோடு பேசுகின்றது. சுதந்திரத்துக்குப்பின் 50களில் தொடங்கி 60கள் வரையிலான பெரிய தொழிற்சாலைகள்; சிம்சன்ஸ் (அமால்கமேஷன் குழுமம்), T.I சைக்கிள்ஸ் (முருகப்பா குழுமம்), TVS மாதிரியான பெரும் குழுமங்களின் / குடும்பங்களின் ஆதிக்கத்திலேயே இருந்துவந்திருக்கின்றன. இவர்கள் தங்களின் வியாபாரத்தை தகவமைத்துக் கொண்ட முறையும், காலத்துக்கேற்றார் போல பரந்துபட்டு முதலீடுகளை மேற்கொண்ட விதமும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை தந்ததும் (பெரும்பாலும் வெளிநாடுகளில் படித்தவர்கள்) என ஏராளமான தகவல்கள் உண்மையிலேயே வியப்பூட்டின.


ஒவ்வொரு குழுமத்தின் கதையும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், என்னைக் மிகவும் கவர்ந்தது இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் MRF நிறுவனத்தின் கதை தான். அதன் நிறுவனர் மேமன் மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட ரப்பர் தோட்டங்கள் சொந்தம். அதனால் அவர் முதன்முதலில் உற்பத்தியில் முதலீடு செய்ய முடிவெடுத்த பொருள் – பலூன். ஆம் பலூன்களே தான்; 10,000 ரூபாய் முதலீட்டில் சென்னை திருவொற்றியூரில் தொழிற்சாலை தொடங்கி, பின்பு தரமில்லாத ஆனால் விலை குறைவான சீன பலூன்களின் போட்டி காரணமாக (அப்போதே சீனாவின் போட்டி) பலூன்கள் தயாரிக்கிற முடிவை விட்டுவிட்டு பொறியியல் உபகரணங்கள், லேட்டக்ஸ் பொருட்கள் என பாதையை மாற்றி treading rubber என்கிற வாகனங்களின் சக்கரங்களுக்குத் தேவைப்படுகிற ரப்பர் ஷீட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்து, பின் ஜெர்மானிய/ஐரோப்பிய/அமெரிக்க நிறுவனங்களோடான வர்த்தக ஒப்பந்தம்; அவர்களின் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து இங்கேயே டயர் உற்பத்தி; விளம்பரங்கள், விளையாட்டுத் துறையில் முதலீடு (சச்சின் பேட், கார் பந்தயங்கள், சென்னையின் பேஸ் ஃபவுண்டேஷன்); என வளர்ந்து இன்று இந்திய சந்தையில் 25% பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கின்றது MRF.

1960-களின் இறுதியில் தொடங்கி 70களின் மத்தியில் வரையிலும் வங்கிகளின் தேசியமயமாக்கம், MRTP (Monopolies & Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியவற்றால் தனியார் தொழில்துறை மொத்தமாக முடங்கிப்போகின்றது. 80களில் கொஞ்சமாய் மாற ஆரம்பித்த இந்த பொருளாதார/தொழில்துறை மந்தநிலை உலகமயமாக்கலுக்குப் பின் பல கதவுகளைத் திறந்துவிட்டு எண்ணிலடங்கா வாய்ப்புகளையும் உருவாக்கியது. இந்த நேரத்தில் சந்தையில் வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றி நிறைய பேசுகிறார் சுஷிலா. நிதி நிறுவனங்கள் (ஸ்ரீராம் குழுமம்), மருத்துவத்துறை (அப்பல்லோ குழுமம்), பெட்ரோலிய ரசாயனத் துறை (SPIC) ஆகியவை இவற்றுள் அடக்கம். 

90களுக்குப் பின் தகவல் தொழில்நுட்பம் / தொலைத்தொடர்பு துறைகளில் ஏற்பட்ட மாற்றத்தில் உருவான நிறுவனங்களாகிய சிஃபி (சத்யம் குழுமம்), சன் குழுமம் (மாறன் சகோதரர்கள் - ஊரறிந்த கதை), TCS, Polaris, Cognizant, Ramco ஆகியவற்றின் தொடக்ககால கதைகள் மட்டுமின்றி, செஷல்ஸ் சிவசங்கரன் (டுபாக்கூர் போலி முதலீட்டாளர்களின் முன்னோடி), முதலீட்டாளர் P.ராஜரத்தினம் (பாடாவதி நிறுவனங்களாய்ப் பார்த்து பார்த்து கையகப்படுத்துவதிலும் எங்கிருந்து முதலீடு வந்ததென்பதை அதீத இரகசியமாக வைத்திருப்பதிலும் பெயர் ‘போனவர்’; சிறைவாசம் அனுபவித்து மீண்டும் வந்து ஒரு சுற்று ஆடி பின்பு மர்மாகிவிட்டார்) என பலரையும்/பலதையும் பற்றிப் பேசிச் செல்கிறார் சுஷிலா. 

தமிழகத் தொழில்துறை வளர்ச்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பெரும்பங்கு பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. அதில் முதன் முதலாக தென் கொரியர்கள் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ஹ்யூண்டாய்,  தமிழக அரசு மற்றும் TIDCOவின் பெரு முயற்சிக்குப் பின் இங்கு வந்த ஃபோர்ட் நிறுவனம் (அவர்களுடைய ஆயிரெத்தெட்டு அபூர்வ நிபந்தனைகள்..!!), ஜப்பானிய-ஃப்ரென்ச் கூட்டுத்தயாரிப்பான ரெனோ-நிஸான் நிறுவனம், டஃபே ட்ராக்டர்கள், பழம்பெரும் அஷோக் லேலாண்ட், ராயல் என்ஃபீல்டு என அத்தனை நிறுவனங்களின் தோற்றம் குறித்தும் வளர்ச்சி குறித்து பேசப்பட்டிருக்கின்றது.

மொத்த புத்தகத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற நகரங்களில்/ஊர்களில் உருவான industrial clusters பற்றிய தகவல்கள் தான். கோவையில் மட்டுமே நூற்பாலைகள் (PSG குழுமம், பன்னாரி அம்மன் குழுமம்), பம்ப் தொழிற்சாலைகள் (CRI பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ்), ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், நூற்பாலை இயந்திர பாகங்கள், பிற மோட்டார்(கள்) உற்பத்தி என வகை வகையாக ஏகப்பட்ட தொழிற்சாலைகள். இது போக திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் (ஏற்றுமதி / இறக்குமதி தனிக்கதை), சங்ககிரி/திருச்செங்கோடு பகுதிகளில் போர்வெல் ரிக் லாரிகள் (எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4000க்கும் மேல்), சிவகாசியில் தீப்பெட்டி - பட்டாசுகள் - அச்சு, நாமக்கல்லில் கோழி/முட்டை பண்ணைகள், வட ஆற்காடு மாவட்டங்களான வேலூர்/ஆம்பூர்/வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. 


இது போக ஈரோடு (சக்தி மசாலா); சேலம் (K.P.நடராஜன் - KPN ட்ராவல்ஸ்); திருச்சி (லயன் டேட்ஸ்); ராம்ராஜ் வேஷ்டிகள்; சாஷே பாக்கெட்டுகளால் நுகர்வோருக்கான சில்லறை விற்பனை சந்தையில் ஒரு பெரும் புரட்சியையே நிகழ்த்திய கவின்கேர் குழுமம்; பால் சார்ந்த தயாரிப்புகளில் பட்டையைக் கிளப்பும் ஹேட்சன் குழுமம் (ஆரோக்யா பால், ஐபாகோ ஐஸ் க்ரீம்); இப்படி ஒவ்வொரு நிறுவனமும் உருவான விதமும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் நிச்சயம் உங்களை அசரடிக்கக் கூடும். இறுதியாக தமிழகத்தின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரான ஸ்ரீதர் வேம்பு (Zoho corp), கிரீஷ் மாத்ருபூதம் (Freshdesk), சுரேஷ் சம்பந்தன் (OrangeScape), கிரீஷ் ராமதாஸ் (Magzter) போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு.

தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், பெருமுதலாளிகள் (காம்ரேடுகள் மன்னிக்க) பற்றிய கதைகள் மீது எப்போதுமே எனக்கு அதீத ஆர்வமுண்டு. இவர்கள் தங்களுடைய பயணத்தை எங்கே தொடங்கியிருப்பார்கள் ? தங்களுடைய பாதை இதுதானென எப்படி முடிவு செய்திருப்பார்கள் ? பரம்பரை பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காலத்தை மீறிய கனவைச் சுமந்தபடி பெரும் யோசனைகளோடு ஏதோவொரு புள்ளியில் அத்தனை எண்ணங்களையும் செயல்வடிவமாக்கி வெற்றிக்கதைகளோடு வலம் வருபவர்களாக இருப்பார்கள். அல்லது எழவே முடியாமல் தடம் தெரியாமல் வீழ்ந்திருப்பார்கள். 

என்னைப் போலவே உங்களுக்கும் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார மாற்றங்களினால் விளைந்த நிகழ்வுகள், வெற்றி/தோல்வி கதைகள் குறித்து அதீத ஆர்வம் இருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகம் உங்களுக்கு செம்மை தீனி...! கட்டாயம் படிக்கவும்

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ’பாயும் தமிழகம்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அதை வாங்க இங்கு: க்ளிக்கவும்







செவ்வாய், 21 நவம்பர், 2017

ஆஃபிஸ் 1st anniversary function - ப்ளானிங் பரிதாபங்கள் - கற்றதும் பெற்றதும்



Well…ரொம்ப பெருசா எதையோ சாதிச்சு முடிச்ச மாதிரியான மனநிலைலதான் இந்த போஸ்ட்ட எழுத ஆரம்பிக்கிறேன். இப்போ நான் வேலை செய்ற ஆஃபிஸ்ல சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது. வழக்கமான captive அதே brand பெயர்ல ஆரம்பிக்காம ஒரு funded startupஆ ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்குள்ள நல்ல வளர்ச்சியும் அடைஞ்சுருக்கு.

எனக்கு எப்பவுமே ரெண்டு விஷயங்கள் ரொம்ப பயம். பொறுப்பெடுத்துக்குறது, திட்டம் போட்றது இது ரெண்டும் தான் அது. எந்த விஷயத்துக்கா இருந்தாலும் being held responsible for something and planning for something is always a pain in the ass. அதே மாதிரி ஒரு எடத்துல ஒரு விஷயத்துக்கு ஆள் இருக்காங்கன்னா வீம்பா அத பண்ணமாட்டேன். அதான் இதப்பண்றதுக்கு ஆள் இருக்காங்கள்ல அப்றம் நாம வேற என்னத்த புதுசா பண்ணி கிழிச்சுடப்போறோம்னு ஒரு மெதப்பு. சோம்பேறித்தனமும் ஒரு காரணம்.

இதுக்கு என்ன பண்ணலாம். நம்மளோட manufacturing defect எப்டி re-engineering பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தப்ப தான் ஜூலை மாசக் கடைசில ஆஃபிஸ் மொத்தத்துக்கும் சீட் ப்ளான் ரெடி பண்ற வேலை வந்து என் தலைல விழுந்துச்சு. Business Analystக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டீங்கன்னா ஒரு ஆணியும் இல்லதான். ஆனாலும் நாமதான் நம்மள திருத்திக்க ஒரு வாய்ப்பு எதிர்பார்த்து காத்துட்டு இருக்கோமே. அதனால ஒரு சவாலாதான் இத எடுத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 600 பேருக்கு அவங்கவங்க ப்ராஜெக்ட்\டீம் அடிப்படைல சீட் ப்ளான் பண்ணி அந்தந்த மேனேஜர்கள், டீம் லீடர்கள் கிட்ட எல்லாம் பேசி. இத எப்புடி செயல் படுத்தப் போறோம்னு விளக்கம் சொல்லி , இதுக்கு மேல support function teams (IT, Admin, HR, Maintenance) எல்லார்கிட்டயும் பேசி, கிட்டத்தட்ட ரெண்டு மாசம் மெனக்கெட்டு ஒரு weekendல காலைல ஏழு மணிலேர்ந்து நைட்டு பதினோரு மணி வரைக்கும் ஓடி ஓடி coordinate பண்ணி வெற்றிகரமா செஞ்சு முடிச்சேன்.

சக்ஸஸ்…!

இதுக்கு நடுவுல அடுத்த அசைன்மெண்ட். CEO கூப்ட்டு அனுப்புனார் அவர் கேபின்ல மீட்டிங்க்னு HR ஒரு நாள் வந்து கூட்டிட்டு போனாங்க. இன்னும் ஒன்றரை மாசத்துல நம்ம கம்பெனியோட 1st anniversary வருது. நீங்க fun committee சேர்ந்து என்ன பண்ணலாம்னு ப்ளான் பண்ணுங்கன்னு சொன்னார். அப்போ கூட கொஞ்சம் பேர் volunteers இருந்தாங்க. இது செப்டம்பர் மாசம் ரெண்டாவது வாரம் வாக்குல நடந்துச்சு. திட்டம் போட ஆரம்பிக்கும்போது ஆஃபிஸ்ல ஒரு நாள் மட்டும் நடத்த வேண்டிய விழாவா இருந்தத திடீர்னு ரெண்டு தனித்தனி விழாவா மாத்த சொன்னாங்க. ஒரு வீக்கெண்ட் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு விழா அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சு ஆஃபிஸ்ல ஒரு நிகழ்ச்சி.

Event management குழுக்கள் கூடப் பேசி அவங்க கிட்ட கொட்டேஷன் கேட்டு என்னென்ன performance வேணும் எப்புடி நிகழ்ச்சிகள ப்ளான் பண்ணலாம்னு ஆரம்பிச்சு, ஹோட்டல்கள் ஒரு நாலஞ்சு எடத்துல விசாரிச்சு தேதி முடிவு பண்ணி estimates வாங்கி இடத்த போய் பாத்து , இதுலேர்ந்து கடைசியா ஒரு event management குழுவையும், ஒரு ஹோட்டலையும் முடிவு பண்ணி அவங்க கூட அடுத்தக் கட்ட உரையாடல்கள், photo op, employee engagement activities, mailers, internal competitions, lucky draw, creative designing, printing, stage design, Audio Visual, performances, ஹோட்டல்ல மெனு, decoration, எல்லாத்துக்கும் மேல 600சொச்சம் emplyees எல்லாரையும் எப்புடி விழாவுக்கு வரவைக்குறதுன்னு ஏகப்பட்ட டென்ஷன்.

எல்லாருக்கும் transport வேற ஏற்பாடு பண்ண வேண்டியிருந்துச்சு. என்னதான் பத்து பேரு எங்க க்ரூப்ல இருந்தாலும் ஒரே ஒருத்தன் மட்டும் தான் செம்ம pro-active என்னோட counterpart மாதிரி இருந்தான்.ஓடி ஓடி வேலை செஞ்சான். மத்தவங்க எல்லாருமே on and off தான். (கடைசி நேரத்துல transportக்கு வாலண்டியரா வந்த கார்த்தி / ராம் சூர்யா ரெண்டு பேருக்கும் கோவில் கட்டி கும்புடனும்) சரியான ஆளுங்க கெடச்சாதான் அவங்ககிட்ட வேலைய delegate பண்றதுல ஒரு அர்த்தம் இருக்கும். இல்லன்னா எத்தன பேர் இருந்தாலும் வேஸ்ட்தான். வேலைய assign பண்ணிட்டு கூடவே தொறத்தி தொறத்தி follow-up பண்ணி கடைசில நாமளே செய்ய வேண்டியதாயிடும்.

ஒரு கட்டத்துல எங்க கம்பெனியோட CFO / CHRO கூட தினமும் மீட்டிங் வெச்சு பேச வேண்டியதா இருந்துச்சு. அதுபோக CEO வாராவாரம் அப்டேட் கேப்பாரு. பெரும்பாலும் நான் மட்டும் நேரடியா பேச வேண்டியதிருக்கும் இல்லன்னா என் தளபதி மாதிரி இருந்த சரண் பேசுவான். நான் வேற ஏதாவது coordinate பண்ணிட்டு இருப்பேன். நாள் நெருங்க நெருங்க டென்ஷன் கூடிட்டே போச்சு. ப்ளான் பண்ண விஷயங்கள எல்லாம் திடீர்னு திடீர்னு மாத்த ஆரம்பிச்சாங்க லீடர்ஷிப் மக்கள். ஏகப்பட்ட மாற்றங்கள். இதுக்கு நடுவுல வெளிலேர்ந்து ஆஃபிஸ்க்கு மெட்டிரியல்ஸ் எடுக்க வேலைக்காக வர vendors கூடவும் பேசி அவங்க வேலைய மேற்பார்வை பண்ணி ஒருங்கிணைக்கனும்.

ஸ்கூல் காலேஜ்லேர்ந்தே இன்னொரு பிரச்சனை இருக்கு. நாம இந்த extra-curricular activitiesல கலந்துகிட்டாலே உடனே நாம சும்மா வந்துட்டுப் போற மாதிரியும் படிக்கவே படிக்காத மாதிரியும் சில ஆசிரியர்களும் கூடப் படிக்கிற பக்கிகளும் நெனச்சுப்பாங்க/பேசுவாங்க. அதே மாதிரி ஆஃபிஸ்லயும் சில கிறுக்கு கும்பல் இருக்கும். நாம கூடுதலா பொறுப்பெடுத்துகிட்டு ஏதும் வேலை செஞ்சா எதோ நமக்கு வேற வேலை இல்லாத மாதிரி நெனச்சுப் பேசுவாங்க. இவங்கள சமாளிக்குறதுக்காக யோசிக்கிறத விட்டுட்டு மயிராச்சேன்னு கண்டுக்காம விட்டுடலாம். நான் அப்டிதான் விட்டுட்டேன். உண்மைல சொல்லனும்னா இந்த இதர வேலைகளோட சேத்து என்னோட day-to-day deliverables எதையுமே தவறாம பண்ணிட்டு தான் இருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா ராத்திரி வீட்டுக்கு வர ரெண்டு மூனு மணி ஆய்டும். வாரயிறுதில கூட ஏதாவது வேலை இருந்தபடியேதான் இருந்துச்சு.

இப்படியாக பல போராட்டங்களுக்கிடையில 12ஆம் தேதி off-site eventஅ வெற்றிகரமா நடத்தி முடிச்சோம். அதுக்கப்புறம் 16ஆம் தேதி நிகழ்ச்சி எங்க ஆஃபிஸ்லயே. அதுவும் நல்லவிதமா முடியனும்னு மனசு பதட்டத்துலயே இருந்துச்சு. அன்னைக்கு என்னையே MC பண்ண வேற சொல்லிட்டாங்க. அதுக்கு முந்தின நாள் ராத்திரி வரைக்கும் எதுக்கும் சரியான தகவல்கள் இல்ல. Stage setup எல்லாம் மேற்பார்வை பாத்துமுடிச்சு வீட்டுக்குப் போகவே ராத்திரி 1.30 மணி ஆச்சு. மறுபடி 7.30 மணிக்கெல்லாம் ஆஃபிஸ் வந்து தான் பல விஷயங்கள தயாரிக்க ஆரம்பிச்சேன். அதுலயும் நிகழ்ச்சி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் தாமதமாகி, பத்து தடவைக்கு மேல நிகழ்ச்சியுடைய வரிசைய மாத்தி நடுவுல நடுவுல கூடுதலா தகவல் சொல்லி ஒரு வழியா அதையும் வெற்றிகரமா முடிச்சாச்சு. மாத்தி மாத்தி ஏகப்பட்ட ‘Good job’.. ‘You guys have put up a great show’ ‘ Well done guys’…!! கைத்தட்டல்கள்…!

இந்த மூனு நாலு மாசத்துல கத்துக்கிட்டது எவ்வளவோ விஷயங்கள் . Finance, Planning, Budget, Purchase Order, Procurement, Vendor Management, Quotation, Negotiation, Production, Transport, Security, Bill to Company, Hospitality, Food and Beverages, Guest Management, Branding, Resource Management, Employee Engagement, Administration இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இதுக்கும் மேல CEO / CFO / CHRO / COO மாதிரி executive leadership மக்களோடான day-to-day interaction. அவங்க சொல்ற விஷயங்கள் . அவங்களோட பார்வைல எப்படி யோசிக்கிறாங்க…What matters to them..! இப்படியாகக் கற்றுக்கொண்டவைகளைத் தாண்டி என்னை நானே re-invent பண்றதுக்கு இது ஒரு அட்டகாசமான வாய்ப்பா அமைஞ்சுது. நம்மளால என்ன முடியும் என்ன முடியாதுன்னு தெரிஞ்சுது. இவ்வளவு நாளா எப்பவுமே எதையாவது யோசிச்சபடியே pre-occupied இருந்த மனசு அப்டியே அமைதியா தெளிவா இருக்கு. ரெண்டு மூனு நாளா தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...