நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 30 நவம்பர், 2017

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி - SURGE - Sushila Ravindranath


பொதுவாக இந்தியாவில் தொழில்முனைவோர் / தொழிலதிபர்கள் என்றாலே டாட்டா/பிர்லா (வழக்கொழிந்த தேய்வழக்கு) தொடங்கி அம்பானி அதானி வரையிலும் வடநாட்டு உதாரணங்களே முன்னிறுத்தப்படுவதுண்டு. தாராளமயமாக்கலுக்கும் முன்னும் சரி பின்னும் சரி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. உலகலவில் புகழ் பெற்ற பலர் உருவானதும் கோடிகளில் புரளும் வர்த்தகங்கள் உருவானதும் இங்கேயே நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு கொஞ்சமும் சளைக்காதவை உருத்தெரியாமல் போனவர்களின் தோல்விக்கதைகள்.

சுசிலா ரவிந்திரன் எழுதிய 'Surge: Tamil Nadu's Growth Story' என்ற புத்தகம் இப்படியான கதைகளைத் தான் வருடங்கள் வாரியாக தரவுகளோடு பேசுகின்றது. சுதந்திரத்துக்குப்பின் 50களில் தொடங்கி 60கள் வரையிலான பெரிய தொழிற்சாலைகள்; சிம்சன்ஸ் (அமால்கமேஷன் குழுமம்), T.I சைக்கிள்ஸ் (முருகப்பா குழுமம்), TVS மாதிரியான பெரும் குழுமங்களின் / குடும்பங்களின் ஆதிக்கத்திலேயே இருந்துவந்திருக்கின்றன. இவர்கள் தங்களின் வியாபாரத்தை தகவமைத்துக் கொண்ட முறையும், காலத்துக்கேற்றார் போல பரந்துபட்டு முதலீடுகளை மேற்கொண்ட விதமும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை தந்ததும் (பெரும்பாலும் வெளிநாடுகளில் படித்தவர்கள்) என ஏராளமான தகவல்கள் உண்மையிலேயே வியப்பூட்டின.


ஒவ்வொரு குழுமத்தின் கதையும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், என்னைக் மிகவும் கவர்ந்தது இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் MRF நிறுவனத்தின் கதை தான். அதன் நிறுவனர் மேமன் மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட ரப்பர் தோட்டங்கள் சொந்தம். அதனால் அவர் முதன்முதலில் உற்பத்தியில் முதலீடு செய்ய முடிவெடுத்த பொருள் – பலூன். ஆம் பலூன்களே தான்; 10,000 ரூபாய் முதலீட்டில் சென்னை திருவொற்றியூரில் தொழிற்சாலை தொடங்கி, பின்பு தரமில்லாத ஆனால் விலை குறைவான சீன பலூன்களின் போட்டி காரணமாக (அப்போதே சீனாவின் போட்டி) பலூன்கள் தயாரிக்கிற முடிவை விட்டுவிட்டு பொறியியல் உபகரணங்கள், லேட்டக்ஸ் பொருட்கள் என பாதையை மாற்றி treading rubber என்கிற வாகனங்களின் சக்கரங்களுக்குத் தேவைப்படுகிற ரப்பர் ஷீட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்து, பின் ஜெர்மானிய/ஐரோப்பிய/அமெரிக்க நிறுவனங்களோடான வர்த்தக ஒப்பந்தம்; அவர்களின் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து இங்கேயே டயர் உற்பத்தி; விளம்பரங்கள், விளையாட்டுத் துறையில் முதலீடு (சச்சின் பேட், கார் பந்தயங்கள், சென்னையின் பேஸ் ஃபவுண்டேஷன்); என வளர்ந்து இன்று இந்திய சந்தையில் 25% பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கின்றது MRF.

1960-களின் இறுதியில் தொடங்கி 70களின் மத்தியில் வரையிலும் வங்கிகளின் தேசியமயமாக்கம், MRTP (Monopolies & Restrictive Trade Practices Act) சட்டம் ஆகியவற்றால் தனியார் தொழில்துறை மொத்தமாக முடங்கிப்போகின்றது. 80களில் கொஞ்சமாய் மாற ஆரம்பித்த இந்த பொருளாதார/தொழில்துறை மந்தநிலை உலகமயமாக்கலுக்குப் பின் பல கதவுகளைத் திறந்துவிட்டு எண்ணிலடங்கா வாய்ப்புகளையும் உருவாக்கியது. இந்த நேரத்தில் சந்தையில் வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றி நிறைய பேசுகிறார் சுஷிலா. நிதி நிறுவனங்கள் (ஸ்ரீராம் குழுமம்), மருத்துவத்துறை (அப்பல்லோ குழுமம்), பெட்ரோலிய ரசாயனத் துறை (SPIC) ஆகியவை இவற்றுள் அடக்கம். 

90களுக்குப் பின் தகவல் தொழில்நுட்பம் / தொலைத்தொடர்பு துறைகளில் ஏற்பட்ட மாற்றத்தில் உருவான நிறுவனங்களாகிய சிஃபி (சத்யம் குழுமம்), சன் குழுமம் (மாறன் சகோதரர்கள் - ஊரறிந்த கதை), TCS, Polaris, Cognizant, Ramco ஆகியவற்றின் தொடக்ககால கதைகள் மட்டுமின்றி, செஷல்ஸ் சிவசங்கரன் (டுபாக்கூர் போலி முதலீட்டாளர்களின் முன்னோடி), முதலீட்டாளர் P.ராஜரத்தினம் (பாடாவதி நிறுவனங்களாய்ப் பார்த்து பார்த்து கையகப்படுத்துவதிலும் எங்கிருந்து முதலீடு வந்ததென்பதை அதீத இரகசியமாக வைத்திருப்பதிலும் பெயர் ‘போனவர்’; சிறைவாசம் அனுபவித்து மீண்டும் வந்து ஒரு சுற்று ஆடி பின்பு மர்மாகிவிட்டார்) என பலரையும்/பலதையும் பற்றிப் பேசிச் செல்கிறார் சுஷிலா. 

தமிழகத் தொழில்துறை வளர்ச்சியில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பெரும்பங்கு பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. அதில் முதன் முதலாக தென் கொரியர்கள் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ஹ்யூண்டாய்,  தமிழக அரசு மற்றும் TIDCOவின் பெரு முயற்சிக்குப் பின் இங்கு வந்த ஃபோர்ட் நிறுவனம் (அவர்களுடைய ஆயிரெத்தெட்டு அபூர்வ நிபந்தனைகள்..!!), ஜப்பானிய-ஃப்ரென்ச் கூட்டுத்தயாரிப்பான ரெனோ-நிஸான் நிறுவனம், டஃபே ட்ராக்டர்கள், பழம்பெரும் அஷோக் லேலாண்ட், ராயல் என்ஃபீல்டு என அத்தனை நிறுவனங்களின் தோற்றம் குறித்தும் வளர்ச்சி குறித்து பேசப்பட்டிருக்கின்றது.

மொத்த புத்தகத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற நகரங்களில்/ஊர்களில் உருவான industrial clusters பற்றிய தகவல்கள் தான். கோவையில் மட்டுமே நூற்பாலைகள் (PSG குழுமம், பன்னாரி அம்மன் குழுமம்), பம்ப் தொழிற்சாலைகள் (CRI பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ்), ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், நூற்பாலை இயந்திர பாகங்கள், பிற மோட்டார்(கள்) உற்பத்தி என வகை வகையாக ஏகப்பட்ட தொழிற்சாலைகள். இது போக திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் (ஏற்றுமதி / இறக்குமதி தனிக்கதை), சங்ககிரி/திருச்செங்கோடு பகுதிகளில் போர்வெல் ரிக் லாரிகள் (எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4000க்கும் மேல்), சிவகாசியில் தீப்பெட்டி - பட்டாசுகள் - அச்சு, நாமக்கல்லில் கோழி/முட்டை பண்ணைகள், வட ஆற்காடு மாவட்டங்களான வேலூர்/ஆம்பூர்/வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. 


இது போக ஈரோடு (சக்தி மசாலா); சேலம் (K.P.நடராஜன் - KPN ட்ராவல்ஸ்); திருச்சி (லயன் டேட்ஸ்); ராம்ராஜ் வேஷ்டிகள்; சாஷே பாக்கெட்டுகளால் நுகர்வோருக்கான சில்லறை விற்பனை சந்தையில் ஒரு பெரும் புரட்சியையே நிகழ்த்திய கவின்கேர் குழுமம்; பால் சார்ந்த தயாரிப்புகளில் பட்டையைக் கிளப்பும் ஹேட்சன் குழுமம் (ஆரோக்யா பால், ஐபாகோ ஐஸ் க்ரீம்); இப்படி ஒவ்வொரு நிறுவனமும் உருவான விதமும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் நிச்சயம் உங்களை அசரடிக்கக் கூடும். இறுதியாக தமிழகத்தின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரான ஸ்ரீதர் வேம்பு (Zoho corp), கிரீஷ் மாத்ருபூதம் (Freshdesk), சுரேஷ் சம்பந்தன் (OrangeScape), கிரீஷ் ராமதாஸ் (Magzter) போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் உண்டு.

தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், பெருமுதலாளிகள் (காம்ரேடுகள் மன்னிக்க) பற்றிய கதைகள் மீது எப்போதுமே எனக்கு அதீத ஆர்வமுண்டு. இவர்கள் தங்களுடைய பயணத்தை எங்கே தொடங்கியிருப்பார்கள் ? தங்களுடைய பாதை இதுதானென எப்படி முடிவு செய்திருப்பார்கள் ? பரம்பரை பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு காலத்தை மீறிய கனவைச் சுமந்தபடி பெரும் யோசனைகளோடு ஏதோவொரு புள்ளியில் அத்தனை எண்ணங்களையும் செயல்வடிவமாக்கி வெற்றிக்கதைகளோடு வலம் வருபவர்களாக இருப்பார்கள். அல்லது எழவே முடியாமல் தடம் தெரியாமல் வீழ்ந்திருப்பார்கள். 

என்னைப் போலவே உங்களுக்கும் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார மாற்றங்களினால் விளைந்த நிகழ்வுகள், வெற்றி/தோல்வி கதைகள் குறித்து அதீத ஆர்வம் இருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகம் உங்களுக்கு செம்மை தீனி...! கட்டாயம் படிக்கவும்

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ’பாயும் தமிழகம்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அதை வாங்க இங்கு: க்ளிக்கவும்







கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...