நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 23 டிசம்பர், 2020

Hestia - நெருப்பின் தேவதைக்கு

 

பேரன்பின் ஹெஸ்டியா,

இந்தக் கடிதத்தை நான் எழுதிக்கொண்டிருக்கும் இரவில், உன் நாட்டில் விடியல் வந்திருக்கும்.கடல் கடந்து, பல்லாயிரம் மைல்களுக்கப்பால் நீ இருந்தாலும், கிட்டத்தட்ட பத்தாண்டுகளாய் தொடரும் இந்த உறவின் பொருட்டும் மனதளவில் உணரும் நெருக்கத்தின் பொருட்டுமே, இந்த மின்மடலில் உனக்காக சொற்களைத் தேடித்தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன். 

இவர்கள் நம் வாழ்வில் நிலைத்து நிற்கப் போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லாத மனிதர்களோடு தான், நாம் பல ஆண்டுகள் நிலைத்திருக்கிற உறவுகளை உருவாக்கிக் கொள்ளுகிறோம். அப்படியொரு முற்றிலும் எதிர்பாராத உறவு தான் நம்முடையதும். உனக்கு நானும் எனக்கு நீயும் அறிமுகமான போது நாமும் அப்படித்தான் நினைத்திருப்போம். உன் எண்ணம் அறியேன் எனினும், நான் அப்படித்தான் நினைத்தேன். 

சம்பிரதாய அறிமுகத்தின் போது ஒரு புன்னகையுடன் கடந்து போய்விட்டாலும், நான் உன்னிடம் முதன்முதலில் அதிகம் பேசியது உன் கண்கள் கலங்கிய ஒரு தருணத்தில் தான். கண்ணீருக்கான காரணத்தையும் உன் தரப்பு நியாயத்தையும் விளக்கிச் சொன்னபின் கொஞ்சம் ஆறுதலடைந்தாய் நீ. 

 பிறகு நீ ஓரிடமும் நான் ஓரிடமுமாய் பணிநிமித்தம் விலகிச் சென்றோம். சம்பிரதாய நல் விசாரிப்புகளும் குறுந்தகவல்களும் தவிர்த்து அதிகமாய் ஒன்றும் பேசிக்கொண்டதில்லை நான். காலம் மீண்டும் நம் பாதைகளை ஒன்றிணைத்தது, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோ. அப்போது தொடங்கியது நம் இரண்டாம் அத்தியாயம் . உரையாடல்களும், காஃபிக் கோப்பைகளும், மாலை நேரத்து நடைகளும், புகைப்படங்களும், பாடல்களும்,திரைப்படங்களும், புத்தகங்களுமாய் கழிந்த அற்புதமான நாட்கள் அவை. உன் எதிர்காலம் குறித்த பெரும் அச்சங்கள் ஏதுமற்றவளாகவே இருந்தாய் நீ. 

வாழ்வில் உன்னைச்சுற்றி உன்னைக் காயப்படுத்தாத மனிதர்கள் இருந்தால் போதுமானது என்றே சொல்வாய். நானும்  உனக்கு அதுவே வாய்க்கட்டுமென விரும்பினேன்..வாழ்த்தினேன். ஒரு வாரயிறுதியில் எதிர்கால வாழ்வு குறித்த பெரும் கனவுகளோடு நீ ஊருக்குக் கிளம்பிச் சென்றிருந்தாய். ஓரிரு நாட்களுக்கும் பின், ஓர் இரவில் என்னைத் தொலைப்பேசியில் அழைத்த நீ வெடித்து அழுதாய். உன்னைத் தேற்ற வார்த்தைகளின்றி ”எல்லாம் சரியாயிடும், நீ அழாத” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.  பின் நீ ஊர் திரும்பியதும் எதிர்பாராத ஓர் அதிகாலையில் உன்னைப் பார்க்க வந்தேன். வாழ்நாளைக்கும் மறக்கமுடியாத புன்னகையை உன் முகத்தில் கண்டேன் அன்று.

நாம் ஒன்றாகச் சென்று வாங்கிய கிட்டார் நினைவிருக்கிறதா உனக்கு. என்னுடைய கிட்டார் இன்றும் உன்னை நினைவூட்டியபடி என் வீட்டுச் சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நீ வெளிநாட்டுக்கு பறந்து போவதாய்ச் சொன்ன ஓர் நாளில் என் கிட்டார் இசைப் பயணம் முடிவுக்கு வந்தது.  :) விமான நிலையத்தில் உன்னைச் சந்தித்துவிட பெருமுயற்சி செய்தும், அதில் தோற்று எங்கோ நெடுந்தொலைவில் இருந்து உனக்குக் கையசைத்து விடைகொடுத்துவிட்டு வந்தேன் நான். 

அதன் பின் நீ ஊர் வந்து, நாம் சந்திக்கையில் உன் அடுத்த வாழ்க்கைப் பயணத்திற்கான அறிவிப்புடன் வந்தாய். மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் உன்னிடமிருந்து விடைபெற்றேன் நான். மாதங்கள் உருண்டோடின, நமக்கிடையேயான தொலைபேசி அழைப்புகள் வெகுவாய் குறைந்துவிட்டிருந்த தருணத்தில் , நான் சற்றும் எதிர்பாரா ஓர் நாளில் ஒரு பெரும் துயரிலிருந்து நீ தப்பிப் பிழைத்த வீடு வந்த கதையைச் சொன்னாய்.  இந்தப் பெண் இன்னும் எத்தனைப் போராட்டங்களைத் தான் தாங்குவாள் என விதியை நொந்து கொண்டேன் நான்.

உனது, ஒரு பயணத்திற்கும்  அடுத்த பயணத்திற்கும் இடையேயான நாட்களே நாம் சந்தித்த நாட்களாக மாறிப்போயின. ஒவ்வொரு முறையும் ஒரு புதுமாதிரியான சவாலைக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தாய் நீ. மற்றுமொரு முறை நீ கடல்கடந்து பறந்துவிட ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாய். பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டுமொரு முறை சந்தித்தோம். ஒரு தேவதை போல உருமாறியிருந்தாய் நீ. அதே பழுப்பு நிற விழிகளும், சிங்கப்பல் புன்னகையுமாய் உடல் மட்டும் வெகுவாய் மெலிந்திருந்தாய். காய்ச்சல் வந்த தேவதையாக, கடுமையான உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டிருந்த உன்னை நான் நேரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஓரளவு நீ சீரான பின், உணவும், உலாவலும், தேநீருமாய் மிச்ச நாளைக் கடத்திவிட்டு பின்பு உன்னைப் பிரிய மனமில்லாமல் ஒரு மென் அணைப்புடனும் , கலங்கிய கண்களுடனும் உன்னிடமிருந்து விடை பெற்றேன்.

இப்போது எண்ணிப்பார்த்தால், எப்போதெல்லாம் நீ ஏதோ ஒரு துன்பத்தில் சிக்குண்டு இருந்தாயே அப்போதெல்லாம் நான் உன்னோடு இருந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உன் வாழ்வில் பெரிதாய் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தாலும், உனக்காக செவிசாய்க்கவும் உரையாடவும், முடிந்தவரையில் கூட நடக்கவும் செய்திருக்கிறேன். I was there for you and will continue to be so.  நாம் அதிகம் பேசிக்கொள்ளாத, குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்ளாத நாட்களில் எல்லாம் நீ கவலைகள் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன்..நம்புகிறேன்...!

இந்த பிரபஞ்சம் உனக்காக இன்னும் எத்தனை ஆச்சரியங்களை வைத்திருக்கிறதோ தெரியாது. ஆனால் அவை உனக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என உறுதியாக நம்பிகிறேன். உன் வாழ்வின் இந்தப் பகுதி, முழுக்க முழுக்க உனக்கே உனக்கானது. எதிர்கொண்ட அத்தனை போராட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த உனக்கு, இது அமர்ந்து இளைப்பாற வேண்டிய நேரம். உன் மகிழ்ச்சியைத் தவிற வேறெதையும் முன்னிறுத்தாமல், புன்னகையும் கொண்டாட்டமுமாய் உன் வாழ்வை நிறைத்துக் கொள். உன் விருப்பப்படி இன்னும் உயரமாகவும் , தூரமாகவும் பறந்து திரி. கொண்டாடு...! 

இந்தப் பத்தாண்டுகளில் பேசியவை போக,அடுத்த முறை சந்திக்கும்போது உன் பழுப்பு நிற விழிகள் மின்ன இன்னும் நிறைய கதைகளைச் சொல். ஒரு புன்னகையோடு உன் எதிரே அமர்ந்து , உன் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன்...!

Loads of love to you...! Love you...!

மனம் நிறைந்த அன்புடன், 

நான்  <3

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...