மற்ற நாட்டு திரைத்துறையைப் போல் அல்லாது இந்தியத் திரையுலகிற்கென எழுதப்படாத சில விதிகள் உண்டு. அதிலொன்று ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமெனில் ‘அஞ்சு பாட்டு, மூனு ஃபைட்டு’ இருந்தாக வேண்டுமென்பது. மற்ற நாடுகளில் சண்டைக்காட்சிகளுக்காகவே பிரத்யேகமான ஆக்ஷன் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டாலும், இந்திய மசாலா திரைப்படங்களைப் போல திரைப்படங்களில் இடம்பெற வேண்டிய கட்டாய அம்சமாக சண்டைக்காட்சிகள் கருதப்பட்டதில்லை. இப்போது இங்கேயும் திரைப்படங்களின் கதைக் கருவிலும், கதை சொல்லும் முறைகளிலும் பெருமளவு மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டாலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் வணிக வெற்றியைப் பெற்று, கோடிகளை அள்ளுகிறவை பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்கள் தான். (உ.தா: கேஜிஎஃப் , விக்ரம்)
திரைப்படங்களில் ஆபத்தான காட்சிகளில் நடிக நடிகையருக்காக டூப் போடுவதில் தொடங்கி ஆக்ஷன் காட்சிகளை திட்டமிட்டு உருவாக்கி செயல்படுத்துவது வரையிலும் பெரும் உழைப்பைக் கொட்டுகிறவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள். அப்படிப்பட்ட சண்டைக்காட்சிகளை திறம்பட வடிவமைக்கிற, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நடிக்கிற ஸ்டண்ட் கலைஞர்களுக்கான அங்கீகாரம் என்பது உண்மையில் கேள்விக்குறி தான். திரைத்துறையின் பல்வேறு தொழிநுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் வழங்கப்படுகிற ஆஸ்கர் மாதிரியான உலகப்புகழ் கொண்ட விருதுகளில் கூட இன்றுவரையிலும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கான/ இயக்குநர்களுக்கான தனிப்பிரிவு ஏதுமில்லை. (ஜாக்கிசானுக்கு மட்டும் திரைத்துறையில் அவருடைய வாழ்நாள் சாதனைகளுக்காக கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது )
அதிர்ஷ்டமிருந்தால் ஒரு பெரிய நடிகருடன் தனியாக சண்டைக் காட்சியில் அடிக்கவோ, கூட சேர்ந்து நடிக்கவோ வாய்ப்புக் கிடைத்து புகழடையலாம் (’தளபதி’ தினேஷ், ‘மகாநதி’ ஷங்கர்) தயாரிப்பாளரின் நம்பிக்கையை சம்பாதித்து, தன் துறையிலும் பெயரெடுத்தால் தனியாக மாஸ்டராகலாம். இல்லாவிட்டால் முகமென்ன, பெயர் கூட வெளியே தெரியாமல் மறைந்து போகலாம். தமிழ்த்திரையுலகில் ஸ்டண்ட் கலைஞனை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களெனில் பம்மல் கே சம்மந்தம் (நகைச்சுவை படம்தான்..ஆனாலும்) , டிஷ்யூம் ஆகியவற்றைச் சொல்லலாம். இதில் டிஷ்யூம் திரைப்படம் சண்டைக்கலைஞர்களின் மனப்போராட்டம் சார்ந்து உணர்வுப்பூர்வமாகவும் பல விஷயங்களைக் கொண்டிருந்தது.
அந்தவகையில் தமிழில், சண்டைக்கலைஞர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கிற முதல் நாவலென ‘போலி’யைச் சொல்லலாம். சிறுவயதில் எம்ஜியார் படங்களைப் பார்த்து வளரும் தவ்லத் கான் , சண்டைக் காட்சிகளில் ஈர்க்கப்பட்டு தானும் ஓர் நாள் ஸ்டண்ட் கலைஞன் ஆவதென முடிவு செய்கிறான். சிலம்பம், கராத்தே என வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏதோவொன்றைக் கற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறான். மகன் பத்தாம் வகுப்பை முடித்தபின் ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி நிறுவனத்தில் வயர்மேன் பயற்சிக்கு அவனை அனுப்பிவைத்து எப்படியாவது வெளிநாட்டில் ஒரு வேலையில் சேர்த்து கரையேற்றிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தவ்லத்தின் தந்தைக்கு அவனுடைய சினிமா ஸ்டண்ட் கலைஞனாகும் கனவின் மீது வெறுப்பு. வயர்மேனுக்காக படித்துக்கொண்டு குடும்பத்துக்காக சின்னச் சின்னதாய் எலக்ட்ரிகல் வயரிங் வேலைகளை செய்தபடியே, வீட்டுக்குத் தெரியாமல் ஸ்டண்ட் கலைஞனாகவும் பணிபுரிகிற தவ்லத் என்னவாகிறான் ? காலமும் அவன் பிறந்த கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பச் சூழலும் அவன் விரும்பிய திசையில் அவனை பயணிக்க வைத்ததா என நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சினிமாவில் நடிகர்களுக்காக டூப் (Dupe) போடும் ஸ்டண்ட் கலைஞர்களை மனதில் வைத்தே ‘போலி’ என நாவலுக்கு பெயரிட்டிருக்கிறார் என நினைக்கின்றேன். நாவலின் ஒவ்வொரு அத்தியாத்திலும், சண்டைக்கலையின் நுணுக்கங்கள், வெவ்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் பற்றிய விவரணைகள் என பலவற்றைப் பேசியிருக்கிறார். அப்போதைய புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான ஹயாத் மாஸ்டர், ஷ்யாம் சுந்தர், சக்திநாதன் என பலரையும் பற்றி நாவலில் தகவல்கள் உண்டு.
என் அப்பா ஆனந்த் தியேட்டரில் எண்டர் த ட்ராகனும், சஃபையர் தியேட்டரில் 36த் சேம்பர் ஆஃப் ஷாவோலினும் பார்த்த கதையை இன்று வரை பல நூறு முறை சொல்லியிருப்பார். நாங்களும் எத்தனையோ முறை கேட்டிருப்போம். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ நேற்று தான் பார்த்தது போல அந்த திரைப்படங்களைப் பற்றியும் சண்டைக்காட்சிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார். எண்டர் த ட்ராகன் ப்ரூஸ் லீ பற்றியும், சார்பட்டா பரம்பரை பாக்ஸர்களைப் பற்றியும் , சென்னைக்கு முகமது அலி வந்த கதையும் கூட சில அத்தியாயங்களில் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது.
எழுபதுகளின் மெட்ராஸில் ராயப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் துவங்குகிற கதை மீர்சாகிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ்,ஆட்டுத்தொட்டி, நீலம் பாஷா தர்கா, கோஷா ஆஸ்பத்திரி, மவுண்ட் ரோடு, இந்திரா நகர், அனகாபுத்தூர், அயோத்தியா குப்பம், கோவளம் தமீம் அன்சாரி தர்கா என மெட்ராஸின் பகுதிகளையும், அப்போதைய திரையரங்குகளும் பேருந்து வழித்தடங்களுமாக அப்போதைய பெருநகரத்தின் நிலவியலையும், தவ்லத்தின் குடும்பம் மற்றும் நண்பர்களின் வாயிலாகவும் அப்போதைய ஒரு sub-cultureஐ யும் திறம்பட ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர் அபுல் கலாம் ஆஸாத் அவர்கள்.
இவருடைய முந்தைய நாவல்களான ‘மின்தூக்கி’, ’உடல்வடித்தான்', ஆகிய படைப்புகளையும் நான் முன்பே வாசித்திருப்பதால் இவருடைய எழுத்திலும் கதையமைப்பிலும் ஒரு சில ஒற்றுமைகளை அடையாளம் காண முடிகிறது. அவை,குடும்பச்சூழல் காரணமாக கிடைத்த வேலையைச் செய்யும் ஒருவன் தன் மனதுக்கு பிடித்தமான மற்றொரு விஷயத்தையும் விடாமல் செய்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஏதோவொன்றைப் பற்றிக் கொண்டு மேலேறி விடல்; கிடைத்ததற்கும் பிடித்ததற்கும் இடையே ஏதேனும் ஒன்றை மட்டுமே பற்றிக்கொண்டு மற்றொன்றை கைவிடுதலின் பின்னுள்ள மனப்போராட்டம்; கதைப் பாத்திரத்தின் எண்ண ஓட்டத்தையும் உரையாடல்களையும் விட கதைக்களத்தின் தொழில்நுட்பம் அல்லது துறைசார்ந்த விளக்கமான வர்ணனைகளுக்கான முக்கியத்துவம்; இந்த அம்சங்கள் ‘போலி’யிலும் இடம்பெற்றிருக்கின்றன.
நாவலின் குறையெனச் சொல்வதானால் முக்கியப்பாத்திரமான தவ்லத் கானுடைய பதின் பருவத்தில் தொடங்கி அவனுடைய வளர்ச்சியையும் வாழ்க்கையையும் படிப்படியாக பதிவுசெய்துவிட்டு இறுதியில் ஒரேயடியாக தாவி கதையை சடுதியில் முடித்திருப்பது மட்டுமே. அபுல் கலாம் அவர்கள் அந்தக் கதையை வேறொரு நாவலில் எழுதும் எண்ணத்தில் இருக்கலாம் என்பதால் அதை விட்டுவிடலாம்.
அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்தும்...!
போலி | எழுத்து பிரசுரம் | 230 பக்கங்கள் | விலை ரூ.280 | ISBN 9789395511278
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக