இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிற முதுமை வரை சிறியதும் பெரியதுமாய் பல முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. கல்வி, உணவுத்தேர்வு, வாழ்க்கை முறை, காதல், திருமணம், தொழில், நட்பு , குடும்பம் என எல்லாவற்றிலுமே நமக்கு முன் வாய்ப்புகளும் கேள்விகளும் கொட்டிக்கிடக்கும்போது, அவற்றுள் நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது நமக்கு இது சரியானதாக இருக்கும் என நாம் நம்பும் ஒன்றையோ தேர்ந்தெடுப்போம். அந்த நேரத்து முடிவு நம் வாழ்வை என்னவாக மாற்றப் போகிறதென யாராலும் கணிக்க முடியாது.
ஒருவேளை , காலம் நமக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்து, நமது முடிவுகள் குறித்த தெளிவை ஏற்படுத்தும்போது எதையுமே மாற்ற முடியாமல் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம். ஆனால் நம் மனதை ஆற்றிக்கொள்ளும் பொருட்டு ,” ஒரு வேளை நாம் இப்படிச் செய்யாமல், இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்காமல் வேறொன்றை தேர்ந்தெடுத்திருந்தால் கட்டாயம் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்” என சமாதானம் சொல்லி கொள்வோம். உண்மையில் வேறு பாதையில் சென்றிருந்தால் வாழ்வு எப்படி இருந்திருக்குமென யாராலுமே கணிக்க முடியாது . அப்படி கணிக்கவோ, அந்த உலகில் நமது வாழ்க்கை நாம் விரும்பியபடி அமைந்திருக்கிறதாவென தெரிந்து கொள்ள முடிந்தால் ? இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையிருந்து விடுபட்டு விருப்பமான வேறொரு வாழ்க்கைக்குள் புகுந்து கொள்ள முடிந்தால் ?
இதுதான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything everywhere all at once) திரைப்படத்தின் அடிநாதம். திரைப்படம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்பு ’மல்டிவெர்ஸ்’ (Multiverse) என்றால் என்னவென்று பார்ப்போம். அண்மையில் வெளிவந்த ஸ்ப்டைர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸின் பல திரைப்படங்களிலும் லோகி, வாண்டாவிஷன் உள்ளிட்ட வலைத்தொடர்களிலும் இந்த மல்டிவெர்ஸ் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதானால் நாம் வாழும் இந்த உலகம் இடம்பெற்றிருக்கிற பிரபஞ்சத்தைப் போலவே , பரந்து விரிந்த வெளியில் பல பிரபஞ்சங்கள் இருக்கலாம். அதில் நம்முடைய வேறொரு பிரதி இந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையில் வேறொரு குணாதிசயம் கொண்டவராக வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவை நாம் பயணித்து செல்ல முடியாத தூரத்தில், வேறொரு பரிணாமத்தில் இருக்கலாம். இந்த கருத்தாக்கமே மல்டிவெர்ஸ் என்றழைக்கப் படுகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இந்த பிரபஞ்சங்களுக்கு இடையேயான பயணத்தைs சாத்தியப்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் , என்கிற கற்பனையே பல படைப்பாளிகளையும் இந்த கருத்தாக்கத்தை நோக்கி திருப்பியிருக்கின்றது.
எவ்ரிதிங் எவ்ரிவேர்... திரைப்படமும் அப்படியொரு மல்டிவெர்ஸில் இடம்பெறும் கதை தான். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான எவ்லின் க்வான் வாங் என்கிற பெண், அவர் நடத்தி வரும் சலவை நிறுவனத்தின் கணக்குவழக்குகளை சரிபார்ப்பதில் தொடங்குகிறது திரைப்படம். எவ்லினின் கணவர் வேமண்ட் வாங், மகள் ஜாய் வாங் உள்ளிட்டோரின் அறிமுகத்துடன் , அவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இல்லாததும் இவர்களுக்கிடையேயான மனத்தாங்கல் குறித்தும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன்பின் எவ்லின் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்யும் பொருட்டு தனது குடும்பத்தாருடன் வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கே இருக்கிற கண்டிப்பான பெண் அலுவலர் எவ்லினிடம் கணக்குகள் குறித்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே எவ்லின் திடீரென அங்கிருந்து நாற்காலியுடன் வேறெங்கோ இழுத்துச்செல்லப்படுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என உணரும் முன்பே அவருடைய கணவர் வேமண்ட் அவர்முன் தோன்றி தான் வேறொரு உலகத்திலிருந்த வந்திருப்பதாகவும் எவ்லின் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் ஒரு சக்தி வாய்ட்ந்த எதிரியின் மூலம் பெரும் ஆபத்து நேர இருப்பதாகவும் சொல்ல அங்கிருந்து திரைப்படம் வேறொரு களத்தில் பரபரப்பாக பயணிக்கத் துவங்குகிறது.
பின்பு வெவ்வேறு உலகங்களில் புகழ்பெற்ற ஆக்ஷன் நடிகையாகவும், சமையல் கலைஞராகவும், பாடகியாகவும், விஞ்ஞானியாகவும், பாறாங்கல்லாகவும் (!) இருக்கும் பல எவ்லின்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்க்கிறோம். எவ்லினுக்குக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நேரப்போகும் ஆபத்து என்ன ? யார் அந்த சக்திவாய்ந்த எதிரி? எவ்லினுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? எவ்லின் சிக்கல்களை முறியடித்து இந்த உலகிற்கு திரும்பினாரா இல்லையா ? என்பதெல்லாம் மீதிக்கதை.
எவ்லினாக மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கும் மைக்கேல் யோஹ் (Michael Yeoh) க்ரவ்ச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன் (Crouching tiger hidden dragon) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சீன/ஹாங்காக் திரைப்படங்களில் 35 ஆண்டுகளாக நடித்து வருபவர். உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசானுக்கு இணையாக பெரும்பாலான சண்டைக்காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்த நடிகை என்ற பெருமையும் மைக்கேல் யோஹ்வுக்கு உண்டு. ஜாக்கிசான் பற்றிக் குறிப்பிடுகையில் மற்றுமொரு ருசிகரமான சம்பவத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
டேனியல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் இயக்குநர்களான டேனியல் க்வான் (Daniel Kwan) டேனியல் ஷெய்னெர்ட் (Daniel Scheinert) இருவரும் ஜாக்கிசானை மனதில் வைத்தே கதையை எழுதியிருக்கின்றார்கள். சண்டைக்காட்சிகள் ,அபத்த நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இந்தப் படத்துக்குத் தேவையான அத்தனைக்கும் ஜாக்கி பொருத்தமானவராக இருப்பார் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால் அவர்கள், அவர்கள் சீனா சென்று ஜாக்கிசானை அணுகியபொழுது அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகே டேனியல்ஸ், பெண் பாத்திரத்தை மையமாக வைத்து கதையை மாற்றி எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மைக்கேல் யோஹ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதும் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததும் யாருமே எதிர்பாராத ஒன்று. ’எவ்ரிதிங் எவ்ரிவேர்’ திரைப்படம் உலகம் முழுக்க பெருவெற்றி பெற்றதை அறிந்த ஜாக்கிசான் , யோஹ்வுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு டேனியல்ஸ் இந்தப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதையும் சொல்லி குறுந்தகவல் அனுப்ப, ‘your loss my bro' என விளையாட்டாக அவரைக் கேலி செய்திருக்கிறார் யோஹ். இதுமட்டுமின்றி எவ்லினின் கணவர் வேமண்ட் பாத்திரத்தில் ஜாக்கிசானைப் போலவே தோற்றமளிக்கும் கேஹ்யூய் க்வானையும் நடிக்கவைத்து குறும்பு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் . அதீதமாக எளிமைபடுத்தி சொல்வதானால் ஒளிப்பதிவு, ஒப்பனை, காட்சியைப் படம்பிடிக்கும் விதம், கோணம் ஆகிவற்றில் மாறுபாடு செய்தல், ப்ரொடக்ஷன் வடிவமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு, கலை இயக்கம், உள்ளிட்டவற்றின் துணையுடன் உருவாக்கப்படுபவை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) எனவும் கணினியின் துணைகொண்டு டிஜிட்டலாக மேம்படுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு,உருவாக்கப்படுபவை விஷ்வல் எஃபெக்ட்ஸ் (VFX) எனவும் அழைக்கப்படுகின்றன.
ஹாலிவுட் திரைப்படங்களும் அவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியத் திரைப்படங்களும் பல நூறு கோடிகளில் செலவு செய்து, பல நூறு தொழிநுட்பக் கலைஞர்களின் துணை கொண்டு VFX செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், முறையான பயிற்சியோ முன்னனுபவமோ இல்லாமல் தாங்களாகவே கிராஃபிக்ஸ் வடிவமைப்பைக் கற்றுக் கொண்ட ஐந்தே ஐந்து தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட VFX காட்சித்துண்டுகளை உருவாக்கியிருக்கிறது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ படக்குழு. VFX இயக்குநர் ஸ்சாக் ஸ்டல்ட்ஸ் (Zak Stoltz) உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஐவரும் லாக்டவுன் காலத்தில் தங்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய கணினியையே பயன்படுத்திபடி வீடியோவில் பேசிப் பேசியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் இத்தனை பெரிய காரியத்தை சாதித்திருக்கின்றார்கள்.
பெரும் ஸ்டூடியோக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த பத்தாண்டுகளாக சிறப்பான சுயாதீன திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் A24 என்னும் நிறுவனமே ’எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அவர்களுடன் இணைந்து இயக்குநர்கள் டேனியல்ஸும், ஹாலிவுட்டில் மார்வெல்லுக்காக பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்களும் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார்கள். இரண்டரை கோடி டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுக்க பத்தரை கோடி டாலர்களை சம்பாதித்திருக்கின்றது. அதுமின்றி ரசிகர்கள், விமர்சகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றது.
’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படம் சிறந்த நடிப்பு, அபாரமான சண்டைக்காட்சிகள், அட்டகாசமான VFX, பொருத்தமான பின்னணி இசை என அத்தனையையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு வேறு சில பல காரணிகளும் உண்டு. தங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் புலம் பெயரும் பெற்றோர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பதின்பருவ இளைஞர்களின் மன அழுத்தம், பெறோருக்கும் அவர்களுக்குமான தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள், தனிமனிதர்கள் எதற்காகவாவது ஒடிக்கொண்டே இருக்க வேண்டிய போட்டிச்சூழல் , இருத்தலியல் சிக்கல்கள், என எல்லாவற்றையும் ஒரு தத்துவார்த்தமான அதே சமயம் அசட்டுத்தனமான நகைச்சுவையினூடாக உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதே அந்த உளப்பிணைப்பிற்குக் காரணம் எனக் கொள்ளலாம்.
’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்...’ -
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக