த.ராஜனின் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து...!
உண்மையில் தீவிரத்தன்மை மிகுந்த கதைகளை படிப்பதற்கென பிரத்தியேகமான ஓர் மனநிலை தேவையாக இருக்கிறது. மேலோட்டமாகவோ மேம்போக்காகவோ பக்கங்களைப் புரட்டி, சொற்களின் மீது கண்களை ஓடவிட்டு மூளையில் அள்ளிப் போட்டுக் கொண்டு பின்பு அசைபோட்டு, கலைந்துகிடக்கிற சொற்களை ஒழுங்கமைத்து, இன்னது தான் கதையென விளங்கிக் கொள்கிற பாணியில் பெரும்பாலான கதைகளைப் படித்துவிடுவேன். சிலருக்கோ பலருக்கோ இதுவே ஏற்புடையதாக இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்
சிக்கலான கதையமைப்பு, உணர்வெழுச்சி மிகுந்திருக்கிற மையப்புள்ளி , கதையின் அடர்த்தி, கடுமையான/செழுமையான மொழி, நம்மைக் கதையில் பொருத்திக் கொள்ளக்கூடிய தன்மை என ஏதேனும் சில காரணங்களால் ஒரு சில கதைகளை என்னால் ஒரே முறையில் படித்து , புரிந்து, உணர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கின்றது. இம்மாதிரியான கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக படித்துக் கடந்துவிடுவதும் எளிதன்று. கதையின் பாரம் மூச்சுமுட்ட தோளில் அழுத்துவது போல் இருக்கும். நிதானமாக அதற்கென நேரமொதுக்கி ஆழம் பார்த்து ஆற்றில் இறங்குவது போல, தீவிரமாக படிக்கத்தொடங்குகையில் அந்தச் சுழல் மெதுவாக நம்மை இழுத்துக் கொள்ளும்.
ஏதோ வாசிப்பினை சாகசம் போல சித்தரிக்கும்பொருட்டு நான் இப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே நான் உணர்ந்ததையே சொற்களில் கடத்திவிட முயன்றிருக்கிறேன். த.ராஜனின் இந்த சிறுகதைத் தொகுப்பு (நெடுங்கதைகள் ? குறுநாவல்கள்?) நான் மேலே குறிப்பிட்டதைப் போன்ற ஒன்று. ராஜன் எனக்கு பத்தாண்டுகளாய் பழகிய நண்பர். கண்டதை (யெல்லாம்) படித்து இலக்கியக் கரையேறிவிடும் முனைப்புடன் சுற்றிய நண்பர் கூட்டத்தில் அவரும் நானும் உண்டு. தேர்ந்த வாசகராகவும் , பின்பு இதழியலாளராகவும், பிழைதிருத்துபவராகவும் (ஒரு கட்டத்தில் அவரை நோக்கி கேலியாக சொல்லப்பட்டதை நிஜமாக்கினார்), அறிந்த நண்பரை எழுத்தாளராகப் பார்க்கிற மகிழ்ச்சியை என்னால் சொற்களில் விவரிக்க முடியாது.
ஆனாலும் அவருடைய முதல் புத்தகம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன், புத்தகத்தின் தலைப்பிற்காக அவருடன் ஒரு சண்டையிட்டேன். அவர் சொன்ன விளக்கங்களை அப்போது மனம் ஏற்காவிட்டாலும், ஓராண்டுக்குப் பின் புத்தகத்தைப் படிக்கையில் அவருடைய விளக்கத்தை சரியானதென ஏற்றுக்கொண்டேன்.167 பக்கங்கள் கொண்ட தொகுப்பில் பாலூட்டிகள், வின்சென்ட்டின் அறை, பழைய குருடி, அரூபி , அறிவுஜீவியின் பொய் என ஐந்தே நெடுங்கதைகள் தாம்.
முதல் கதையான பாலூட்டிகள் கிட்டத்தட்ட ஒரு நாட்டார் கதைக்கான தன்மையைக் கொண்டிருக்கிறது. எங்கோ திருநெல்வேலியின் அடையக்கருங்குளதிலிருந்து வந்து, சென்னை முழுவதுமாக நகரமயமாவதற்கு முன்பு தென்னந்தோப்பாகக் கிடந்த இடத்தில் சுடலைமாடனை வழிபட்டு வெளவாலைப் பலியிடுகிற ‘வெளவால் தாத்தா’ கந்தையனையும், இரண்டு தலைமுறைக்குப்பின், பாட்டனை பார்த்தேயிராமல் அவர் பற்றிய கதைகளின் வழியாகவே அவரை அறிந்துகொண்ட பேரன் சின்னதுரையையும் முன்பு தென்னந்தோப்புகள் நிறைந்திருந்து இப்போது நகரமயமாகிவிட்ட இடத்தை வந்தடைகையில் வெளவாலே இவர்கள் இருவரையும் இணைக்கிற கண்ணியாக இருக்கிறது. இந்தக் கதையில் குறிப்பிட்ட சொல்லவேண்டிய பகுதி ஒன்றுண்டு. கந்தையன் ஒரு வெளவாலுக்கு பிரசவம் பார்க்கிற (ஆம் !) பகுதியின் விவரணைகளை ஒரு மாதிரி அச்சத்துக்கும் அருவெறுப்புக்கும் இடையேயான சிலிர்ப்புடனேயே படித்தேன். மொத்தத்தில் இந்தச் சிறுகதையை, பிழைப்புக்காக இடம்பெயர்ந்தும் தங்களுடைய அடையாளங்களை இழந்தும்/துறந்தும் வாழ்கிற மக்களுடைய இருத்தலியல் சிக்கல்களை (existential crisis ?!) பேசுகிற கதையாகவே புரிந்து கொள்கிறேன்.
அடுத்த கதையான வின்சென்ட்டின் அறை, மனப்பிறழ்வு கொண்ட , தன்னுடைய பாலினம் சார்ந்த அடையாளச்சிக்கலுடைய ஒருவனின் கதை, அவனைப் பற்றி மற்றவர்களின் வழியாக உருவாக்கப் படுகிற சித்திரமும் , கதைசொல்லி வின்சென்ட் பற்றி உருவாக்குகிற சித்திரமும் கதையின் முடிவில் ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத கதை.
பழைய குருடி - தொகுப்பின் முகமான இந்தக் கதையில் நம்மை யோசிக்க வைத்து திசைதிருப்பும்படியான ஒரு வேலையைச் செய்திருக்கிறார் ராஜன். பாலூட்டிகள் கதையின் பாத்திரங்களான கந்தையனும் சின்னத்துரையும் இங்கேயும் உலவுகின்றனர். முதல் கதையின் நீட்சி போலவே தெரிந்தாலும் சாதியெனும் அடையாளத்தை தொலைத்துவிடும் முனைப்புடன் செயல்படும் சின்னதுரையை, நொய்த்தொற்றுக் கால பொதுமுடக்கம் வேறு உருவில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்துவதும் , அவனும் அவன் குடும்பத்தினருடன் உழல்வதுமாக முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.
இந்த தொகுப்பை எழுத்தாளர் பா.வெங்கடேசனுக்கும், எழுத்தாளர் சீனிவாச ராமநுஜம் சமர்ப்பித்திருந்தார் ராஜன். அதற்கான காரணத்தை கடைசி இரண்டு கதைகளான அரூபி , அறிவுஜீவியின் பொய் ஆகியவற்றைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் தூயனுடைய நாவலான கதீட்ரலின் ஒரு பகுதியை பெயர் மாற்றங்களுடன் அப்படியே பயன்படுத்தியிருப்பதாக முன்னுரையில் சொல்லியிருந்தார் ராஜன். அரூபி சிறுகதையில் குறிப்பிட்ட அந்தப் பகுதியை வாசிக்கையில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
தொகுப்பின் ஐந்தாவது/இறுதி கதையான ‘அறிவுஜீவியின் பொய் ’ இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பூனா ஒப்பந்தம் என்னும் வரலாற்று நிகழ்வினைப் பின்னணியாக வைத்து காலச்சுழல் (timeloop) மாதிரியான ஒருவகையில் எழுதப்பட்ட சிறுகதை. இப்படியொரு கதையினை யோசிப்பதற்கே மனம் சோர்ந்துவிடும். ராஜன் அரசியலையும், வரலாற்றையும், இந்தக் கதைக்கான போக்கையும் சரிசமமாக கையாண்டிருக்கிற விதம் வியக்கவைக்கிறது.
நான் வாசித்தவரையில் புனைவெழுத்தின் சாத்தியக்கூறுகளை முடிந்த அளவு சோதித்து ,புதிதாக முயன்றுபார்த்து மிகச்சிக்கலான abstract (இணையான எளிய தமிழ்ச்சொல் புலப்படவில்லை) உணர்வுகளையும் காட்சிகளையும் எழுத்தின்வழி கடத்தியதாகக் கருதும் எழுத்தாளர்கள் மனோஜ் (புனைவின் நிழல் தொகுப்பு), பா.வெங்கடேசன் (ராஜன் மகள்) , தூயன் (கதீட்றல்) ஆகியோர். அவருடைய நண்பனாக, த.ராஜனும் அந்த வரிசையில் இடம்பெறுவார் என உறுதியாக நம்புகிறேன். இந்த சிறுகதைத் தொகுப்பு அதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கின்றது. இருன்மையான, யாரும் பேசத்தயங்குற உணர்வுகளையும் ,தீவிரத்தன்மை வாய்ந்த, இறுக்கமான அல்லது சிக்கலான கதைக்களங்களை எடுத்துக் கொண்டு அதனை முடிந்தளவு உயிர்ப்புடனும் , தனிப்பட்ட உரையாடல்கள் அதிகமின்றி கதையின் போக்கினை விவரிப்பதன் வழியாகவும் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பினை நமக்குத் தந்திருக்கின்றார்.
மிகச்சிறப்பான அட்டைப்படம் /புத்தக வடிவமைப்புக்காகவும் , கதைகளினூடாக இடம்பெறுகிற ஆஸ்வால்டோ கயாசமின் (Oswaldo Guayasamin) ஓவியங்களுக்காகவும் எதிர் வெளீயீடு பதிப்பகத்துக்கு என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும் <3
பழைய குருடி - த.ராஜன் | சிறுகதைத்தொகுப்பு | 167 பக்கங்கள் (கெட்டி அட்டை)| விலை ரூ.250 | ISBN9789390811175
புத்தகம் வாங்க: https://rb.gy/4sb59
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக