நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 13 மார்ச், 2023

Everything everywhere all at once

 

இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிற முதுமை வரை சிறியதும் பெரியதுமாய் பல முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. கல்வி, உணவுத்தேர்வு, வாழ்க்கை முறை, காதல், திருமணம், தொழில், நட்பு , குடும்பம் என எல்லாவற்றிலுமே நமக்கு முன் வாய்ப்புகளும் கேள்விகளும் கொட்டிக்கிடக்கும்போது, அவற்றுள் நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது நமக்கு இது சரியானதாக இருக்கும் என நாம் நம்பும் ஒன்றையோ தேர்ந்தெடுப்போம். அந்த நேரத்து முடிவு நம் வாழ்வை என்னவாக மாற்றப் போகிறதென யாராலும் கணிக்க முடியாது.

ஒருவேளை , காலம் நமக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்து, நமது முடிவுகள் குறித்த தெளிவை ஏற்படுத்தும்போது  எதையுமே மாற்ற முடியாமல் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம். ஆனால் நம் மனதை ஆற்றிக்கொள்ளும் பொருட்டு ,” ஒரு வேளை நாம் இப்படிச் செய்யாமல், இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்காமல் வேறொன்றை தேர்ந்தெடுத்திருந்தால் கட்டாயம் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்” என சமாதானம் சொல்லி கொள்வோம். உண்மையில் வேறு பாதையில் சென்றிருந்தால் வாழ்வு எப்படி இருந்திருக்குமென யாராலுமே கணிக்க முடியாது . அப்படி கணிக்கவோ, அந்த உலகில் நமது வாழ்க்கை நாம் விரும்பியபடி அமைந்திருக்கிறதாவென தெரிந்து கொள்ள முடிந்தால் ? இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையிருந்து விடுபட்டு விருப்பமான வேறொரு வாழ்க்கைக்குள் புகுந்து கொள்ள முடிந்தால் ?

இதுதான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything everywhere all at once) திரைப்படத்தின் அடிநாதம்.  திரைப்படம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்பு ’மல்டிவெர்ஸ்’ (Multiverse) என்றால் என்னவென்று பார்ப்போம். அண்மையில் வெளிவந்த ஸ்ப்டைர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸின் பல திரைப்படங்களிலும் லோகி, வாண்டாவிஷன் உள்ளிட்ட வலைத்தொடர்களிலும் இந்த மல்டிவெர்ஸ் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால் நாம் வாழும் இந்த உலகம் இடம்பெற்றிருக்கிற பிரபஞ்சத்தைப் போலவே , பரந்து விரிந்த வெளியில் பல பிரபஞ்சங்கள் இருக்கலாம். அதில் நம்முடைய வேறொரு பிரதி இந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையில் வேறொரு குணாதிசயம் கொண்டவராக வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவை நாம் பயணித்து செல்ல முடியாத தூரத்தில், வேறொரு பரிணாமத்தில் இருக்கலாம். இந்த கருத்தாக்கமே மல்டிவெர்ஸ் என்றழைக்கப் படுகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இந்த பிரபஞ்சங்களுக்கு இடையேயான பயணத்தைs சாத்தியப்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் , என்கிற கற்பனையே பல படைப்பாளிகளையும் இந்த கருத்தாக்கத்தை நோக்கி திருப்பியிருக்கின்றது.

எவ்ரிதிங் எவ்ரிவேர்... திரைப்படமும் அப்படியொரு மல்டிவெர்ஸில் இடம்பெறும் கதை தான். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான எவ்லின் க்வான் வாங் என்கிற பெண், அவர் நடத்தி வரும் சலவை நிறுவனத்தின் கணக்குவழக்குகளை சரிபார்ப்பதில் தொடங்குகிறது திரைப்படம். எவ்லினின்  கணவர் வேமண்ட் வாங், மகள்  ஜாய் வாங் உள்ளிட்டோரின் அறிமுகத்துடன் , அவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இல்லாததும் இவர்களுக்கிடையேயான மனத்தாங்கல் குறித்தும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன்பின் எவ்லின் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்யும் பொருட்டு  தனது குடும்பத்தாருடன்  வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கே இருக்கிற கண்டிப்பான பெண் அலுவலர் எவ்லினிடம் கணக்குகள் குறித்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே எவ்லின் திடீரென அங்கிருந்து  நாற்காலியுடன் வேறெங்கோ இழுத்துச்செல்லப்படுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என உணரும் முன்பே அவருடைய கணவர் வேமண்ட் அவர்முன் தோன்றி தான் வேறொரு உலகத்திலிருந்த வந்திருப்பதாகவும் எவ்லின் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் ஒரு சக்தி வாய்ட்ந்த எதிரியின் மூலம் பெரும் ஆபத்து நேர இருப்பதாகவும் சொல்ல அங்கிருந்து திரைப்படம் வேறொரு களத்தில் பரபரப்பாக பயணிக்கத் துவங்குகிறது.

பின்பு வெவ்வேறு உலகங்களில் புகழ்பெற்ற ஆக்‌ஷன் நடிகையாகவும், சமையல் கலைஞராகவும், பாடகியாகவும், விஞ்ஞானியாகவும், பாறாங்கல்லாகவும் (!) இருக்கும் பல எவ்லின்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்க்கிறோம். எவ்லினுக்குக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நேரப்போகும் ஆபத்து என்ன ? யார் அந்த சக்திவாய்ந்த எதிரி? எவ்லினுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? எவ்லின் சிக்கல்களை முறியடித்து இந்த உலகிற்கு திரும்பினாரா இல்லையா ? என்பதெல்லாம் மீதிக்கதை.

எவ்லினாக மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கும் மைக்கேல் யோஹ் (Michael Yeoh)  க்ரவ்ச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன் (Crouching tiger hidden dragon) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சீன/ஹாங்காக் திரைப்படங்களில் 35 ஆண்டுகளாக நடித்து வருபவர். உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசானுக்கு இணையாக பெரும்பாலான சண்டைக்காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்த நடிகை என்ற பெருமையும் மைக்கேல் யோஹ்வுக்கு உண்டு. ஜாக்கிசான் பற்றிக் குறிப்பிடுகையில் மற்றுமொரு ருசிகரமான சம்பவத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

 டேனியல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் இயக்குநர்களான டேனியல் க்வான் (Daniel Kwan) டேனியல் ஷெய்னெர்ட் (Daniel Scheinert) இருவரும் ஜாக்கிசானை மனதில் வைத்தே கதையை எழுதியிருக்கின்றார்கள். சண்டைக்காட்சிகள் ,அபத்த நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இந்தப் படத்துக்குத் தேவையான அத்தனைக்கும் ஜாக்கி பொருத்தமானவராக இருப்பார் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால் அவர்கள், அவர்கள் சீனா சென்று ஜாக்கிசானை அணுகியபொழுது அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகே டேனியல்ஸ், பெண் பாத்திரத்தை மையமாக வைத்து கதையை மாற்றி எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 

மைக்கேல் யோஹ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதும் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததும் யாருமே எதிர்பாராத ஒன்று. ’எவ்ரிதிங் எவ்ரிவேர்’ திரைப்படம் உலகம் முழுக்க பெருவெற்றி பெற்றதை அறிந்த ஜாக்கிசான் , யோஹ்வுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு டேனியல்ஸ் இந்தப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதையும் சொல்லி குறுந்தகவல் அனுப்ப, ‘your loss my bro'  என விளையாட்டாக அவரைக் கேலி செய்திருக்கிறார் யோஹ். இதுமட்டுமின்றி எவ்லினின் கணவர் வேமண்ட் பாத்திரத்தில் ஜாக்கிசானைப் போலவே தோற்றமளிக்கும் கேஹ்யூய் க்வானையும் நடிக்கவைத்து குறும்பு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். 

’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் . அதீதமாக எளிமைபடுத்தி சொல்வதானால் ஒளிப்பதிவு, ஒப்பனை, காட்சியைப் படம்பிடிக்கும் விதம்,  கோணம் ஆகிவற்றில் மாறுபாடு செய்தல், ப்ரொடக்‌ஷன் வடிவமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு, கலை இயக்கம், உள்ளிட்டவற்றின் துணையுடன் உருவாக்கப்படுபவை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) எனவும் கணினியின் துணைகொண்டு டிஜிட்டலாக மேம்படுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு,உருவாக்கப்படுபவை விஷ்வல் எஃபெக்ட்ஸ் (VFX) எனவும் அழைக்கப்படுகின்றன.

ஹாலிவுட் திரைப்படங்களும் அவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியத் திரைப்படங்களும் பல நூறு கோடிகளில் செலவு செய்து, பல நூறு தொழிநுட்பக் கலைஞர்களின் துணை கொண்டு VFX செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், முறையான பயிற்சியோ முன்னனுபவமோ இல்லாமல் தாங்களாகவே கிராஃபிக்ஸ் வடிவமைப்பைக் கற்றுக் கொண்ட ஐந்தே  ஐந்து  தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட VFX  காட்சித்துண்டுகளை உருவாக்கியிருக்கிறது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ படக்குழு. VFX இயக்குநர் ஸ்சாக் ஸ்டல்ட்ஸ் (Zak Stoltz) உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஐவரும் லாக்டவுன் காலத்தில் தங்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய கணினியையே பயன்படுத்திபடி வீடியோவில் பேசிப் பேசியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் இத்தனை பெரிய காரியத்தை சாதித்திருக்கின்றார்கள். 

பெரும் ஸ்டூடியோக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த பத்தாண்டுகளாக  சிறப்பான சுயாதீன திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் A24 என்னும் நிறுவனமே  ’எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அவர்களுடன் இணைந்து இயக்குநர்கள் டேனியல்ஸும், ஹாலிவுட்டில் மார்வெல்லுக்காக பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்களும் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார்கள். இரண்டரை கோடி டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுக்க பத்தரை கோடி டாலர்களை சம்பாதித்திருக்கின்றது. அதுமின்றி ரசிகர்கள், விமர்சகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றது.

’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படம்  சிறந்த நடிப்பு, அபாரமான சண்டைக்காட்சிகள், அட்டகாசமான VFX, பொருத்தமான பின்னணி இசை என அத்தனையையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு வேறு சில பல காரணிகளும் உண்டு. தங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் புலம் பெயரும் பெற்றோர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பதின்பருவ இளைஞர்களின் மன அழுத்தம், பெறோருக்கும் அவர்களுக்குமான தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள், தனிமனிதர்கள் எதற்காகவாவது ஒடிக்கொண்டே இருக்க வேண்டிய போட்டிச்சூழல் , இருத்தலியல் சிக்கல்கள், என எல்லாவற்றையும் ஒரு தத்துவார்த்தமான அதே சமயம் அசட்டுத்தனமான நகைச்சுவையினூடாக உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதே அந்த உளப்பிணைப்பிற்குக் காரணம் எனக் கொள்ளலாம்.


’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்...’ -

வெள்ளி, 27 ஜனவரி, 2023

போலி - Story of a real hero

 

உங்களுக்கு சண்டை போடப் பிடிக்குமா ? காரணமின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுவது, வம்பு பேசி பிரச்சனைகளை வலிந்து உருவாக்கிக் கொள்ளுவது, அடுத்தவரிடம் கத்திப் பேசி அது கைகலப்பில் முடிவது... இந்த மாதிரி சண்டையில்லை... காலம் காலமாக திரைப்படங்களில் நாம் பார்த்து வளர்ந்த டிஷ்யூம் டிஷ்யூம் சண்டைக் காட்சிகள். உங்கள் வயதுக்கும் ரசனைக்கும் ஏற்றார் போல எம்ஜியார், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி , கமல், விஜயகாந்த், அர்ஜூன், அஜித் , விஜய், அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ஜாக்கி சான், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்,ப்ரூஸ்லீ, ஜெட்லி, ப்ரெண்டன் ஃப்ரேசர், அரனால்டு, சில்வஸ்டர் ஸ்டாலோன், டோனி ஜா, ட்வைன் ’த ராக் ’ஜான்சன் என யாரோ ஒரு நிழல் நாயகன் திரையில் அதிரடியாக நிகழ்த்திக் காட்டிய ஆக்‌ஷன் சண்டைக்காட்சிகளைக் கண்டு அவர்களுக்கு ரசிகர்களாகியிருப்போம்.

மற்ற நாட்டு திரைத்துறையைப் போல் அல்லாது இந்தியத் திரையுலகிற்கென எழுதப்படாத சில விதிகள் உண்டு. அதிலொன்று ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமெனில் ‘அஞ்சு பாட்டு, மூனு ஃபைட்டு’ இருந்தாக வேண்டுமென்பது. மற்ற நாடுகளில் சண்டைக்காட்சிகளுக்காகவே பிரத்யேகமான ஆக்‌ஷன் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டாலும், இந்திய மசாலா திரைப்படங்களைப் போல திரைப்படங்களில் இடம்பெற வேண்டிய கட்டாய அம்சமாக சண்டைக்காட்சிகள் கருதப்பட்டதில்லை. இப்போது இங்கேயும் திரைப்படங்களின் கதைக் கருவிலும், கதை சொல்லும் முறைகளிலும் பெருமளவு மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டாலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் வணிக வெற்றியைப் பெற்று, கோடிகளை அள்ளுகிறவை பெரும்பாலும் ஆக்‌ஷன் திரைப்படங்கள் தான். (உ.தா: கேஜிஎஃப் , விக்ரம்)


திரைப்படங்களில் ஆபத்தான காட்சிகளில் நடிக நடிகையருக்காக டூப் போடுவதில் தொடங்கி ஆக்‌ஷன் காட்சிகளை திட்டமிட்டு உருவாக்கி செயல்படுத்துவது வரையிலும்  பெரும் உழைப்பைக் கொட்டுகிறவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள். அப்படிப்பட்ட சண்டைக்காட்சிகளை திறம்பட  வடிவமைக்கிற, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நடிக்கிற ஸ்டண்ட் கலைஞர்களுக்கான அங்கீகாரம் என்பது உண்மையில் கேள்விக்குறி தான். திரைத்துறையின் பல்வேறு  தொழிநுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் வழங்கப்படுகிற ஆஸ்கர் மாதிரியான உலகப்புகழ் கொண்ட விருதுகளில் கூட இன்றுவரையிலும்  ஸ்டண்ட் கலைஞர்களுக்கான/ இயக்குநர்களுக்கான தனிப்பிரிவு ஏதுமில்லை. (ஜாக்கிசானுக்கு மட்டும் திரைத்துறையில் அவருடைய வாழ்நாள் சாதனைகளுக்காக கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது ) 

அதிர்ஷ்டமிருந்தால் ஒரு பெரிய நடிகருடன் தனியாக சண்டைக் காட்சியில் அடிக்கவோ, கூட சேர்ந்து நடிக்கவோ வாய்ப்புக் கிடைத்து புகழடையலாம் (’தளபதி’ தினேஷ், ‘மகாநதி’ ஷங்கர்) தயாரிப்பாளரின் நம்பிக்கையை சம்பாதித்து, தன் துறையிலும் பெயரெடுத்தால் தனியாக மாஸ்டராகலாம். இல்லாவிட்டால் முகமென்ன, பெயர் கூட வெளியே தெரியாமல் மறைந்து போகலாம். தமிழ்த்திரையுலகில் ஸ்டண்ட் கலைஞனை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களெனில் பம்மல் கே சம்மந்தம் (நகைச்சுவை படம்தான்..ஆனாலும்) , டிஷ்யூம் ஆகியவற்றைச் சொல்லலாம். இதில் டிஷ்யூம் திரைப்படம் சண்டைக்கலைஞர்களின் மனப்போராட்டம் சார்ந்து  உணர்வுப்பூர்வமாகவும் பல விஷயங்களைக் கொண்டிருந்தது.

அந்தவகையில் தமிழில், சண்டைக்கலைஞர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கிற முதல் நாவலென ‘போலி’யைச் சொல்லலாம். சிறுவயதில் எம்ஜியார் படங்களைப் பார்த்து வளரும் தவ்லத் கான் , சண்டைக் காட்சிகளில் ஈர்க்கப்பட்டு தானும் ஓர் நாள் ஸ்டண்ட் கலைஞன் ஆவதென முடிவு செய்கிறான். சிலம்பம், கராத்தே என வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏதோவொன்றைக் கற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறான். மகன் பத்தாம் வகுப்பை முடித்தபின் ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி நிறுவனத்தில் வயர்மேன் பயற்சிக்கு அவனை அனுப்பிவைத்து எப்படியாவது வெளிநாட்டில் ஒரு வேலையில் சேர்த்து கரையேற்றிவிடலாம் என்று  நினைத்துக் கொண்டிருந்த தவ்லத்தின் தந்தைக்கு அவனுடைய சினிமா ஸ்டண்ட் கலைஞனாகும் கனவின் மீது  வெறுப்பு. வயர்மேனுக்காக படித்துக்கொண்டு குடும்பத்துக்காக சின்னச் சின்னதாய் எலக்ட்ரிகல் வயரிங் வேலைகளை செய்தபடியே, வீட்டுக்குத் தெரியாமல் ஸ்டண்ட் கலைஞனாகவும் பணிபுரிகிற தவ்லத் என்னவாகிறான் ? காலமும் அவன் பிறந்த கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பச் சூழலும் அவன் விரும்பிய திசையில் அவனை பயணிக்க வைத்ததா என நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

சினிமாவில் நடிகர்களுக்காக டூப் (Dupe) போடும் ஸ்டண்ட் கலைஞர்களை மனதில் வைத்தே ‘போலி’ என நாவலுக்கு பெயரிட்டிருக்கிறார் என நினைக்கின்றேன். நாவலின் ஒவ்வொரு அத்தியாத்திலும், சண்டைக்கலையின் நுணுக்கங்கள், வெவ்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் பற்றிய விவரணைகள் என பலவற்றைப் பேசியிருக்கிறார். அப்போதைய புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான ஹயாத் மாஸ்டர், ஷ்யாம் சுந்தர்,  சக்திநாதன் என பலரையும் பற்றி நாவலில் தகவல்கள் உண்டு.  

என் அப்பா ஆனந்த் தியேட்டரில் எண்டர் த ட்ராகனும், சஃபையர் தியேட்டரில் 36த் சேம்பர் ஆஃப் ஷாவோலினும்  பார்த்த கதையை இன்று வரை பல நூறு முறை சொல்லியிருப்பார். நாங்களும் எத்தனையோ முறை கேட்டிருப்போம். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ நேற்று தான் பார்த்தது போல அந்த திரைப்படங்களைப் பற்றியும் சண்டைக்காட்சிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார். எண்டர் த ட்ராகன் ப்ரூஸ் லீ பற்றியும், சார்பட்டா பரம்பரை பாக்ஸர்களைப் பற்றியும் , சென்னைக்கு முகமது அலி வந்த கதையும் கூட சில அத்தியாயங்களில் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது.

எழுபதுகளின் மெட்ராஸில் ராயப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் துவங்குகிற கதை மீர்சாகிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ்,ஆட்டுத்தொட்டி, நீலம் பாஷா தர்கா, கோஷா ஆஸ்பத்திரி, மவுண்ட் ரோடு, இந்திரா நகர், அனகாபுத்தூர்,  அயோத்தியா குப்பம், கோவளம் தமீம் அன்சாரி தர்கா என மெட்ராஸின் பகுதிகளையும், அப்போதைய திரையரங்குகளும் பேருந்து வழித்தடங்களுமாக அப்போதைய பெருநகரத்தின் நிலவியலையும், தவ்லத்தின் குடும்பம் மற்றும் நண்பர்களின் வாயிலாகவும் அப்போதைய ஒரு  sub-cultureஐ யும் திறம்பட ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர் அபுல் கலாம் ஆஸாத் அவர்கள். 

இவருடைய முந்தைய நாவல்களான ‘மின்தூக்கி’, ’உடல்வடித்தான்', ஆகிய படைப்புகளையும் நான் முன்பே வாசித்திருப்பதால் இவருடைய எழுத்திலும் கதையமைப்பிலும் ஒரு சில ஒற்றுமைகளை அடையாளம் காண முடிகிறது. அவை,குடும்பச்சூழல் காரணமாக கிடைத்த வேலையைச் செய்யும் ஒருவன் தன் மனதுக்கு பிடித்தமான மற்றொரு விஷயத்தையும் விடாமல் செய்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஏதோவொன்றைப் பற்றிக் கொண்டு மேலேறி விடல்; கிடைத்ததற்கும் பிடித்ததற்கும் இடையே ஏதேனும் ஒன்றை மட்டுமே பற்றிக்கொண்டு மற்றொன்றை கைவிடுதலின் பின்னுள்ள மனப்போராட்டம்; கதைப் பாத்திரத்தின் எண்ண ஓட்டத்தையும் உரையாடல்களையும் விட கதைக்களத்தின் தொழில்நுட்பம் அல்லது துறைசார்ந்த  விளக்கமான வர்ணனைகளுக்கான முக்கியத்துவம்; இந்த அம்சங்கள் ‘போலி’யிலும் இடம்பெற்றிருக்கின்றன.

நாவலின் குறையெனச் சொல்வதானால் முக்கியப்பாத்திரமான தவ்லத் கானுடைய பதின் பருவத்தில் தொடங்கி அவனுடைய வளர்ச்சியையும் வாழ்க்கையையும் படிப்படியாக பதிவுசெய்துவிட்டு இறுதியில் ஒரேயடியாக தாவி கதையை சடுதியில் முடித்திருப்பது மட்டுமே. அபுல் கலாம் அவர்கள் அந்தக் கதையை வேறொரு நாவலில் எழுதும் எண்ணத்தில் இருக்கலாம் என்பதால் அதை விட்டுவிடலாம். 

அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்தும்...!

போலி | எழுத்து பிரசுரம் | 230 பக்கங்கள் | விலை ரூ.280 | ISBN 9789395511278

வெள்ளி, 30 டிசம்பர், 2022

விட்னஸ் - Witness - 2022


இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மிக முக்கியமான திரைப்படம் 'விட்னஸ்' தான். மலக்குழி மரணங்கள் (உண்மையில் அவற்றை கொ.லை.கள் என்றே சொல்ல வேண்டும்) நம் நாட்டின் மிகப்பெரிய அவலம். பல வருடங்களாக யாராரோ என்னென்னவோ முயற்சிகள் செய்தும் சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிறகும் கூட தடுக்க முடியாத துயரம்.

இந்தியாவில் கழிப்பறை சார்ந்தும், துப்புறவு பணியாளர்கள் சார்ந்தும் சாதியின் அடிப்படையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்து Where India Goes, Unseen (The story of India's manual scavengers), மாதிரியான ஒரு சில புத்தகங்களிலும்.. கக்கூஸ் ஆவணப்படத்தின் வாயிலாகவும் பேசியிருக்கிறார்கள். பெஸாவாடா வில்சன் மாதிரியான தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் இது குறித்து கேள்வி எழுப்பியபடியே இருக்கின்றார்கள்.  புகைப்படக் கலைஞர் பழனிகுமார் கடந்த 6/7 ஆண்டுகளாக மலக்குழி மரணங்களை தன்னுடைய புகைப்படங்களின் வழியாக ஆவணப்படுத்தி வருகிறார். 

எத்தனை பேர் எவ்வளவு போராடியும் இந்த சிக்கலுக்கு ஒரு நிரந்தரமான தீர்வோ முடிவோ இதுவரை இல்லை. கடந்த 27 ஆண்டுகளில் 1014 பேரின் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது  ஒன்றிய அமைச்சரைவையின் (Ministry for social justice and empowerment) அதிகாரப்பூர்வமான தகவல். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம்.

 இதுவரை மலக்குழி மரணங்களுக்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் 99 சதவிகிதம் இந்திய தண்டனை சட்டபிரிவு 304A, 1860 ன் படி அலட்சியம் காரணமாக நிகழ்ந்தவை என்றே பதியப்பட்டிருக்கின்றன. (Death due to negligence) ஒரே ஒரு சதவிகிதம்  மட்டுமே Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 ன் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. (link for article) 

விட்னஸ் திரைப்படத்தின் கரு மேற்சொன்ன தகவலின் அடிப்படையிலானது தான். ஒரு 20 வயது  இளைஞனின் அகால மரணமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தான் திரைப்படம். ஒரு பரபரப்பான investigative thriller திரைப்படமாக மாற்றிவிடக்கூடிய அத்தனை சாத்தியமும் இருந்தாலும் அதைச் செய்யாமல் எந்த வித romanticismம் இல்லாமல் நிதானமாக தான் சொல்ல வந்ததை நேர்பட சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதுவே திரைப்படம் சொல்ல வந்த கருத்தை மிக ஆழமாக நம் மனதில் பதியவைத்திருக்கிறது.
கூடவே பெருநகரின் மத்தியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு புறநகர்ப் பகுதிகளில் குடிவைக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், இந்த அரசு இயந்திரத்தின் அமைப்புச் சிக்கல்களில் அவர்கள் சிக்கித் தவிப்பதையும் கதையினூடாகவே பேசியிருக்கிறார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை நேரடியாக வெளிப்படையாக சித்தரித்திருக்கின்றார்கள். (இதுல என்ன பல பேருக்கு கோவம்/வெறுப்பு/வன்மம்னு தெரியல) உண்மையில் தோழர் செல்வா  நிஜவாழ்வில் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற பணியையே இந்த திரைப்படத்தில் தான் ஏற்ற பாத்திரமாகவும் செய்திருக்கிறார். (அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு - விகடனில் செல்வா தோழர் பற்றி எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் கட்டுரை இணைப்பு) 

 
இத்தனை ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத இந்த அவலத்திற்கு இனியேனும் ஒரு முடிவு பிறக்குமா தெரியவில்லை. 
ஆனால் இப்படியொரு பிரச்சனை இருப்பதையும், இதன் பின்னணியில் இருக்கிற சாதியின் அடிப்படையிலான சிக்கல்களையும் குறித்து ஒரு உரையாடலை ஏற்படுத்திய வகையில் இந்த ஆண்டின் கருத்தியல் அடிப்படையில் மிக முக்கியமான திரைப்படமாகிறது விட்னஸ். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 

Witness (Tamil) movie is streaming on Sony Liv OTT

செவ்வாய், 13 டிசம்பர், 2022

நெருநல் உளனொருவன் இன்றில்லை - Eulogy Hymn


 
என் நண்பர்கள் இறக்கிறார்கள்
வரிசையாக
கண்ணாடி சவப்பெட்டிகள் முன்
தலை கவிழ்ந்து நிற்பது
வழக்கமான கடமையாகிவிட்டது
 
நான் இப்போதெல்லாம்
சாவுக்கு அவ்வளவு சகஜமாகிவிட்டேன்
சாவு ஒரு சிறுபூனைபோல
என் நெஞ்சில் படுத்து
கதகதப்பாக உறங்குகிறது
அதன் களங்கமற்ற கண்களைக்காண
என் கண்களில் நீர் தளும்புகிறது
 
- நெஞ்சில் தூங்கும் மரணம், மனுஷ்ய புத்திரன்

 பேரன்பின் ராஜாவுக்கு,

 நீ எங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடை பெற்று இன்றுடன் நூற்றி சொச்சம் நாட்கள் கடந்து விட்டன. நீயில்லாத உலகில் தனக்கும் இடமில்லையென உன் அம்மாவும் புறப்பட்டுவிட்டார்கள்

இயல்பு வாழ்வென ஒன்று இருப்பதால்,  உன் இழப்பிலிருந்தும் நினைப்பிலிருந்தும் மீண்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு மற்ற அனைத்திலும் கவனம் செலுத்த முயன்று கொண்டேயிருக்கேன். விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன். பசிக்கு மீறி உண்டு திணறுகிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அலுவல்கள், கடமைகள், நண்பர்கள், பயணங்களென முற்றாய் என் உடலும் உள்ளமும் களைத்துப் போகுமளவு எல்லாவற்றிலும் எல்லாரிடமும் என்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன். 

ஆனாலும் உன் இன்மை, ஒரு நிழல் போல . கருமேகம் போல, ஒரு பூனையைப்போல என்னைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றது. நானும் என்னைப் போல் உன் மீது அன்பு கொண்ட, நீ வாழ்ந்து தொலைத்திருக்கலாம் என்று திட்டித்தீர்க்கிற ஏனையோரும் என்ன செய்திருந்தால் உன்னைப் பிடித்து வைத்திருக்கலாமென யோசித்துக் களைத்து , இப்போதாவது அவன் விரும்பிய அமைதியை அவன் அடைந்துவிட்டிருப்பானென சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். குற்ற உணர்விலிருந்தும் கையறு நிலையிலிருந்தும் எங்களை விடுவித்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும் ?

நீ சிக்கிக் கொண்டிருந்த சுழலிருந்து மேலேறி வர, உன்னை மீட்கும் பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் ஒன்றையேனும் நீ பற்றிகொண்டிருக்கலாம் ராஜா. 

 ஆனால் உன் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. எப்போதும் மனிதர்கள் சூழ இருந்தவன் நீ. உன்னுடைய விருப்பத்தை விடவும் சுற்றத்தாரின் விருப்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை தந்து அவர்களைக் கொண்டாடித் தீர்த்தவன் நீ . எல்லா கொண்டாட்ட பொழுதுகளிலும் உன்னை எளிதாக பொருத்திக் கொள்வாய். உன் வட்டத்து நண்பர்களின் வாழ்வில் அவர்களுடைய நன்னாட்கள் அத்தனையிலும் நீ உடனிருந்திருக்கிறாய். நான் உட்பட; ஆனாலும் எங்கள் யாருக்கும் உன்னோடு நிற்கும் அந்த நல்வாய்ப்பைத் தர மறுத்துவிட்டாய்.என் வருத்தமெல்லாம் இத்தனை பேருக்கு மத்தியிலும் நீ தனியனாய் உணர நேர்ந்ததைப் பற்றித்தான்.

 நீ முற்றிலுமாய் உனது இருப்பை அழித்துக் கொள்வதற்கு முன் எல்லோரிடமிருந்தும் உன்னை விலக்கிக் கொண்டாய். நீ ஒரு கடும் பிடிவாதக்காரனாக உன்னை வரித்துக் கொண்டது உன் விலகலை விடவும் வேதனையானது . ஒரு பயணியானவன் தான் நிழலுக்காய் அமர்ந்த மரங்களை எப்போதும் காயப்படுத்தில்லை. உன் மீதான அன்பை மறக்கச்செய்யுமளவு கடுமையான கோபத்துடனேயே இருந்தேன் நான். இப்போதும் ஏதெனும் ஒரு வசை சொல்லி அவ்வப்போது உன்னை வாய்விட்டு திட்டிவிடுகிறேன். 

விலகிச் செல்கிற தேவதைகளின் முன்பு உள்ளங்கைகளில் மெழுகுவர்த்தியுடன் நீ மண்டியிட்டு பிரார்த்தித்திருக்க வேண்டாம் ராஜா. 

இன்னும் கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ எனத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.நீ வசித்த தெருவை கடந்து போகும்போதெல்லாம், நீ எப்போதும் செல்கிற டீக்கடையை தாண்டும்போதெல்லாம், நீ அடிக்கடி திரிகிற மாலுக்கும் திரையங்கிற்கும் செல்லும்போதெல்லாம், உனக்கு விருப்பமான நடிகனின் திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம்,  நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நீ ஆடிக்களைத்த பாடல்களை கேட்கும் போதெல்லாம், உனது இருப்பை இந்த உலகம் எனக்கு நினைவூட்டியபடியே இருக்கின்றது.

அழ வேண்டியதெல்லாம் அழுது முடித்தாயிற்று. கேட்க வேண்டிய அத்தனையும் கேட்டு முடித்தாயிற்று. எந்த முடிவுக்கும் வர வேண்டிய நிர்பந்தமோ, காரணம் தேடும் கட்டாயமோ இல்லை. உன்னையும் உனது நினைவுகளையும்
இந்த உலகம் நிதானமாக ஆனால் நிச்சயமாக கடந்து சென்றுவிடும்.எங்கள் மனதில் உனது இன்மை அல்லது உன் இருப்பின் வெற்றிடம் வேறு பல மனிதர்களாலும் அவர்தம் கதைகளாலும் நினைவுகளாலும் நிரப்பப்பட்டுவிடும். உன்னைப் பற்றி மற்ற யாரிடத்திலும் இனி பேசுவேனா தெரியாது ராஜா.

இந்தக் கடிதத்துக்காக எந்த விதமான பதிலையும் நான் எதிர்பார்க்கவில்லை . என் மனச்சுமையை இறக்கிவைக்கும் பொருட்டு சுயநலமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ராஜா . இன்னும் ஓரிரு வாரங்களில் உனது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்மஸ் விடுமுறையில் தொடங்கி ஏதேனும் ஒரு  ஊருக்கு பயணப்பட்டு, உன் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்து விட்டு புத்தாண்டுக்கு ஊர் திரும்புவாய். எப்போதும் உனது பிறந்தநாளின் போது நீ ஊரில் இருந்ததேயில்லை.இப்போதும் அப்படித்தான் என எண்ணிக்கொள்கிறேன். இம்முறை நீ வெகு தொலைவில் ஓரிடத்துக்கு பயணப்பட்டிருக்கிறாய். நீ விரும்பிய யாவும் அங்காவது உனக்கு கிடைக்க வேண்டுமென இந்த பிரபஞ்சத்திடம் உன் சார்பில் கோரிக்கை வைக்கிறேன் ராஜா. 

Advanced birthday wishes...Long may you live in our hearts Raja...! :'( :'( :'(

என்றென்றும் அன்புடன்,

நான்


 

 



Related Posts Plugin for WordPress, Blogger...