நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

7.83 ஹெர்ட்ஸ் - க.சுதாகர்


சுதாகருக்கு எண்கள் மேல் அப்படி என்ன காதல் என்று தெரியவில்லை. :) முதல் புத்தகத்துக்குப் பெயர் 6174.இரண்டாவது புத்தகம் போன மாதம் வெளியிடப்பட்ட 7.83 ஹெர்ட்ஸ்.சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்றாலே கம்ப்யூட்டரும் ரோபோவும் என்பதுதான் தமிழ் இலக்கிய அறிவியல் புனைகதை உலகின் மரபு. ஆனாலும் அதை மாற்றி biotechnology, microbiology, genetics, anthropology, biochemistry, metallurgy, organic chemistry, crystallography, geometry  என பல துறைகளில் வித்தியாசனமான தளங்களில் அறிவியல் புனைகதைகளில் பட்டைய கிளப்பிவருகிறார் சுதாகர்.

நாவலின் base என்னவென்று பார்த்தால் ’சை-ஆப்ஸ்’(Psy-Ops) எனப்படும் ரேடியோ கதிர்களை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒலிபரப்பி அதன் மூலம் மனிதர்கள் (அல்லது விலங்குகளின்) மனநிலையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்டுவிப்பது. வேலவதார் சரணாலயத்தில் ஓநாய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளம்பெண் ஓநாய்களாலேயே கொடூரமாக கொல்லப் படுவதில் தொடங்குகிறது கதை.இதன்பின் பெங்களூரில் ஒரு முக்கியமான தகவலை மட்டும் விட்டுவிட்டு தன்னை எரித்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிற தீவிரவாதி (போராளி..!!)...அவன் பயன்படுத்திய பெனெல்லி சப்மெஷின் கன்... செசன்யாவுக்கும் அவனுக்குமான தொடர்பு... மனிக்கெயிசம்... HAARP கருவி... (High Frequency Active Auroral Research Program)... ஒநாய்களுக்கும் செசன்யர்களுக்குமான தொடர்பு... ஓநாய்களின் வரலாறு... என வெவ்வேறு தகவல்களோடு வெவ்வேறு தளங்களில் பயனிக்கிற கதைகளின் இழைகள் அத்தனையையும் அட்டகாசமாய் கோர்த்து படிக்கிற நமக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாகத் தந்திருக்கின்றார்.

6174 போல இந்த நாவலில் வருகிற தகவல்கள் overloadஆக இல்லாமல் படிக்கிற நமக்கு சின்னச் சின்ன ஆச்சரியங்களை ஏற்படுத்தியபடி..அதேநேரம் மைய கதையிலிருந்தும் விலகாமல் இருக்கின்றன.பொதுவாகவே சயின்ஸ் ஃபிக்‌ஷன்களில் நம்மை அசரடிக்கிற ஒரு டீட்டெய்லிங் இருக்கும். போகிற போக்கில் ஒரு தகவலையும் சொல்லிவிட்டு போய்விட முடியாது .அதுவும் உலகெங்கும் உள்ள வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் ,புத்தகத்தில் படிக்கிற தகவல்களை (புனைவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) validate செய்யத் தயங்குவதில்லை. ’டாவின்சி கோட்’ புகழ் டான் ப்ரவுன் மாதிரியான எழுத்தாளர்கள் ஒரு எக்ஸ்பர்ட் டீமை வைத்து தனது நாவலுக்கான தகல்களைக் கட்டமைப்பதாக இணையத்தில் படிக்கிறோம். ஜான் க்ராக்னர் எழுதிய ‘Into the wild' நாவலில் காட்டில் தனியாக வாழ்கிற நாயகன் Christopher Mccandles ஏதோ ஒரு விஷ காட்டுச் செடியின் விதைகளைத் தெரியாமல் உண்டதால் இறப்பதாக எழுதியிருப்பார். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் அவர் உயிரைப் பறித்தது என்ன மாதிரியான விஷம்...அவர் உண்டதாக எழுதப்பட்ட செடியில் நிஜமாகவே அப்படி உயிரைப்பறிக்கிற விஷம் இருக்கிறதாவென ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துவருகிறது.

இப்படியான சூழலில்.. தனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத பல்வேறு துறைகளின் தகவல்களை எடுத்துக்கொண்டு, அவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு.. கதைக்கேற்ற வகையில் அந்த தகவல்களை புகுத்தி.. அடிப்படை அறிவியல் அறிமுகம் இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி எழுதி... ப்ப்பா..  monstrous effort.சுதாகரின் உழைப்பு உண்மையிலேயே அசரடிக்கிறது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் கருந்தேள் ராஜேஷ் தமிழில் அறிவியல் புனைகதைகள் மற்றும் திரைப்படங்களின் தோற்றம் வளர்ச்சி குறித்தும் அவற்றின் தற்போதைய வெற்றிடம் குறித்து அட்டகாசமான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவர் சொல்லியிருக்கிற அந்த unconquered territoryயை சுதாகர் கைப்பற்றுகிற நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்த்துகள் சுதாகர் சார்...!!

சுதாகரின் முந்தைய புத்தகமான ’6174’  குறித்து நான் எழுதியது : இங்கே

7.83 ஹெர்ட்ஸ் -க.சுதாகர்
வம்சி பதிப்பகம்
விலை. ரூ.200
ISBN: 97893845980404
ஆன்லைனில் வாங்க: இங்கே 

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...